ஒரே வீட்டுக்குள் வசித்தும் பேசாத தம்பதியர்…. பேச வைத்த நிர்மலா பெரியசாமி!

|

Solvathellam Unmai Bridges Couple Who Were Not Talking

"எட்டுமாசமா என்னோட மனைவி என்கூட பேசுறது இல்லை. ஒரே வீட்லதான் இருக்கோம். எதனால அவ பேச மாட்டேங்கிறான்னு தெரியலையே என்று சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் புகார் தெரிவித்தார் கணவர்.

இதைக் கேட்ட நிர்மலா பெரியசாமி, புகார் சொன்ன கணவரிடம் ஃப்ளாஸ்பேக் கேட்டார். தங்களுடையது காதல் திருமணம் என்றும், தனக்கும் தன் மனைவிக்கும் 13 வயது வித்தியசம் என்றும் கூறினார். தன்னுடைய மனைவி தனக்கு அத்தை மகள் முறை வேண்டும் என்பதால் 10 வகுப்பு பரிட்சை எழுதி முடித்த உடனே பள்ளிக்குச் சென்று தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறி அதிரவைத்தார்.

தன் மீது விழுந்த கொலைப்பழியினால் திருமணமான சிறிதுநாட்களிலேயே சிறைக்கு சென்றுவிட்டேன் என்று கூறிய அவர், சிறையில் இருந்தவாரே தன்னுடைய மனைவியை பி.ஏ. பிஎல் படிக்க வைத்துள்ளார்.

7 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையில் இருந்து விடுதலையாகி மனைவியுடன் சந்தோசமாக சேர்ந்து வாழத் தொடங்கினோம் என்று கூறிய அவர், தான் சிகரெட் குடிப்பது தன் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் தினசரி சண்டை வருகிறது. இப்போது இருவரும் பேசி எட்டு மாதங்கள் ஆகிறது என்றும் நிர்மலா பெரியசாமியிடம் கூறினார்.

உடனே மனைவியை அழைத்த நிர்மலா பெரியசாமி, கணவரிடம் ஏன் பேசுவதில்லை என்று கேட்டார். குழந்தை இருப்பதால் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்று பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவர் கேட்கவில்லை. குடித்துவிட்டு வந்து திட்டுகிறார். அவர்தான் தன்னுடன் பேசுவதில்லை என்று கூறினார் மனைவி பாலாமணி.

இதன்பின்னர் இருவரையும் சமாதானம் செய்துவைத்து பேசவைத்தார் நிர்மலா பெரியசாமி. ஒரே வீட்டிற்குள் இருந்தும் 8 மாதங்கள் பேசாமல் இருந்துவிட்டு டிவி நிகழ்ச்சியின் மூலம் சந்தோசமாக பேசினர் தம்பதியர்.

கொலைக்குற்றத்திற்காக சிறை சென்ற நிலையிலும் கணவன் நிச்சயம் திரும்பி வருவான் என்று காத்திருந்து வக்கீலுக்கும் படித்து முடித்துள்ளார் அந்தப் பெண். இனிமேல் நான் சிகரெட் குடிக்கமாட்டேன். மது அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்ததோடு தன் அம்மாவிற்கு ஒரு வீடும், தன் மனைவிக்கு ஒரு வீடும் கட்டப் போவதாக கூறினார்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரலாற்றிலேயே கணவன் மனைவி பஞ்சாயத்து என்று வந்து யாரும், யாரையும் திட்டாமல், அடிக்காமல், அழுகையின்றி சந்தோசமாக முடிந்தது நேற்றைய நிகழ்ச்சிதான் என்று கூறவேண்டும்.

 

Post a Comment