ஈரோடு: கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.
எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா...
பேட்டியின்போது அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
நான் நடனத்தில் சிறந்து விளங்கியதால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகிய 3 முதல்வர்களுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாதது. சுமார் 300 படங்களில் நடித்துள்ளேன்.
இன்றைய நடிகைகள்...
அன்று நடிகைகளுக்குள் போட்டி இருந்தது. ஆனால் சகஜமாக பழக மாட்டார்கள். இன்று நடிகைகளிடம் போட்டி இருந்தாலும் அவர்கள் விழாக்களுக்கு ஒன்றாக செல்கிறார்கள். நட்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.
ஆட்டோகிராப், ஆடுகளம், மைனா..
நான் சமீபத்தில் பார்த்து ரசித்த ஆட்டோகிராப், ஆடுகளம், மைனா.. ஆகியவை சிறந்த படங்களாகும். நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
இப்போது நடிகைகள் சினிமாவை தொழிலாக நினைத்து நடிக்கிறார்கள். ஒரு கட்டத்துக்குப் பின்னர் பிடித்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.
புதிய இயக்குநர்கள்
அன்று சினிமாவில் சென்டிமென்ட், நடனம், கவர்ச்சி, சண்டை காட்சி இருந்தது. இப்போது அதையெல்லாம் ட்ராமா என்கிறார்கள். ஏதோ ஜாலியாக படம் சென்று கொண்டு இருக்கிறது. அதனால்தான் திருமணம் ஆன நடிகைகள் நடிக்க முடியவில்லை.
புதிய இயக்குனர்கள் புதிய புதிய விஷயத்தை சொல்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது.
கடுமையான தண்டனை...
டெல்லி மாணவியை கற்பழித்து கொன்ற சம்பவம் கொடூரமானது. அவர்கள் மனித மிருகங்கள். அவர்கள் தாயின் வயிற்றில்தான் பிறந்தார்களா? என்று எனக்கு தோன்றுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன. எனவே கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
விஸ்வரூபம்...
விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்புவது என்பது கமல் எடுத்த முடிவு. நல்லெண்ணத்தில்தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார். இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.
சாவித்ரியுடன்...
சாவித்திரி அம்மாவோடு நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ‘‘எங்கள் தாய்‘‘ என்ற படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படமும் பாதியில் நின்று போனது.
இவ்வாறு நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா கூறினார்.
Post a Comment