டெல்லி: பெண் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்காததால், பாலிவுட்காரர்களுக்கு பிரச்சினையில் அக்கறையில்லை என்று கூறுவது தவறு, என்றார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
டெல்லியில், ஐ.நா.வின் ‘யுனிசெப்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார நிகழ்ச்சியில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.
அங்கு அவர் அளித்த பேட்டி:
டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், மிகக்கொடிய குற்றம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். முதல்முறையாக இளைஞர்கள் ஒன்றாக போராட முன்வந்துள்ளனர். அதே சமயத்தில், போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும்.
பெண்ணுரிமை குறித்து தேசிய அளவில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதே என விருப்பம். ஆண்களுக்கு பெண்கள் குறித்த அணுகுமுறை மாற வேண்டும். ஆணுக்கு சமமாக பெண்களை மதிக்க வேண்டும்.
குற்றம் சாட்டுவதா?
இதுபோன்ற பிரச்சினைகளில் இந்தி திரையுலகம் உதட்டளவில் மட்டும் குரல் கொடுப்பதாகக் கூறுவது தவறு. திரையுலகினர், இத்தகைய போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், எங்களுக்கும் இந்த உணர்வு உள்ளது. எங்களுக்கு பணிச்சுமை இருப்பதால், போராட்ட களத்தில் எங்களால் இருக்க இயலாது. அதற்காக எங்களுக்கு அப்பிரச்சினைகளில் அக்கறை இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.
நாங்களும் விவாதத்தில் பங்கேற்றுதான் வருகிறோம். ஆனால், பிரபலமாக இருக்கும் ஒரே காரணத்துக்காக, பாலிவுட் திரையுலகம் குறி வைக்கப்படுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை," என்றார்.
Post a Comment