ரஜினி பட தலைப்பு விஜய்க்கு கிடைக்குமா?

|

Vijay's image to get the title?  ரஜினி நடித்த 'தங்கமகன் பட டைட்டிலில் நடிக்க விரும்புகிறார் விஜய். பட டைட்டிலுக்கு அனுமதி கிடைக்குமா என்பது பற்றி விரைவில் தெரியும். 'கிரீடம் விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இதன் தொடக்க விழா நடந்தது. மும்பையில் ஷூட்டிங் நடக்கிறது. இதற்கிடையில் இப்படத்துக்கு டைட்டில் வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விஜய் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டுடன் 20 வருடம் ஆகிறது. இதையடுத்து அதற்கு பொருத்தமாக பட டைட்டில் இருக்க வேண்டும் என்று இயக்குனர் கருதினார். ரஜினி நடித்த 'தங்கமகன் டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று பட குழுவினர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் இந்த தலைப்புக்கு அனுமதி கிடைக்குமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஏற்கனவே மலையாள 'பாடிகாட் ரீமேக்கில் விஜய் நடித்தபோது, அதற்கு எம்ஜிஆர் நடித்த 'காவல்காரன் பட பெயரை வைக்க திட்டமிடப்பட்டது. காவல்காரன் படத்தை தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது. இதையடுத்து காவலன் என்று டைட்டில் வைத்து ரிலீஸ் செய்தனர். இப்போது விஜய் தனது புது படத்துக்கு 'தங்கமகன் என தலைப்பு வைக்க விரும்புகிறார். ஏதேச்சையாக இதுவும் சத்யா மூவிஸ் தயாரிப்புதான். ஏற்கனவே விஜய்க்கு எம்ஜிஆர் பட தலைப்பு தர அந்நிறுவனம் மறுத்துள்ளது. இந்நிலையில் ரஜினி பட தலைப்பை விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

Post a Comment