கலைஞர் டிவியில் ‘நல்லா பேசுங்க.... நல்லதையே பேசுங்க' என்ற விவாத நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை திண்டுக்கல் ஐ. லியோனி தொகுத்து வழங்குகிறார்.
அரட்டை அரங்கம் தொடங்கி நீயா நானா, களம் காணும் விவாதங்கள் வரை பல விவாத நிகழ்ச்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. கலைஞர் தொலைக்காட்சியிலும் புதிய விவாத நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
இளம் தலைமுறையினரின் பேச்சுத் திறமையை வளர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களில் இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் சமூக அவலங்களைப் பற்றியும், சமுதாயத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றியும் பேசுகின்றனர்.
திண்டுக்கல் ஐ. லியோனி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கடந்த வாரம் திருப்பூரில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியில் குடும்பம் மகிழ்ச்சியானது என்று ஒரு பிரிவினரும் குடும்பம் மகிழ்ச்சியாக இல்லை என்று மற்றொரு பிரிவினரும் பேசினார்கள்.
இதற்கு ஏன் நல்லா பேசுங்க... நல்லதே பேசுங்க என்று பெயர் வைக்கப்பட்டது என்று தொடங்கி நல்லா பேசுவதைப் போல நல்லதைப் பேசனும் என்று கூறினார். புதிய நிகழ்ச்சியை திறம்பட நடத்தினர் லியோனி. ஏற்கனவே பட்டிமன்றம் நடத்தி பல ஆண்டுகள் அனுபவம் இருப்பதால் இந்த விவாத நிகழ்ச்சியை நன்றாகவே நடத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
Post a Comment