சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் கே ராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்த கமல் ரசிகர்கள் மூவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கமல் நடித்த ‘விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச்சில் ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேட்டி கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தனர் தங்களை கமல் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர்.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரில் கமல் ரசிகர்கள் செல்போனில் மிரட்டல் விடுப்பதாகக் கூறியிருந்தார்.
இதுபற்றி மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது போனில் மிரட்டியது ஓசூரை சேர்ந்த கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஓசூர் சென்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூர்த்தி, முருகன், சூரிய பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைதான 3 பேரையும் போலீசார் சென்னைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அச்சுறுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் ரசிகர்கள் 50 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Post a Comment