நான் சிறுவனாக இருந்தபோது நீங்களெல்லாம் என்னோட நண்பர்களாக இருந்திருந்தால் அந்த பொறாமையில் இன்னமும் அதிக திறமைசாலியாக வளர்ந்திருப்பேன் என்று உலகநாயகன் கமல்ஹாசன் ஆதங்கப்பட்டார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டி 20 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த கமல், சிறுவர் சிறுமியர்களின் பாடலை ரசித்துக் கேட்டார். இந்த நிகழ்ச்சியில் கமல் நடித்த திரைப்படங்களில் இருந்துதான் பாடல்கள் பாடப்பட்டன. ஒவ்வொரு பாடலும் பாடி முடிக்கப்பட்ட உடன் அந்த பாடல் எடுக்கப்பட்ட சூழல், எந்த அளவிற்கு இந்த பாடல் தனக்கு பெயர் பெற்றுத் தந்தது என்றும் பகிர்ந்து கொண்டார் கமல்.
இன்னும் திறமைசாலியாக வளர்ந்திருப்பேன்
ப்ளூ அணியினர் கமலின் எவர்கிரீன் ஹிட் பாடலான "இளமை இதோ.... இதோ..." பாடலை பாடினர். பாடலை பாடப் பாட கமல் முகத்தில் பெருமிதம் பொங்கியது. அவர்களைப் பாராட்டிய கமல், இவ்ளோ சின்ன வயதில் நிறைய திறமைகள் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது நீங்களெல்லாம் எனக்கு நண்பர்களாக கிடைத்திருந்தால் உங்களைப் பார்த்து பொறாமையில் நான் இன்னும் நிறைய திறமைசாலியாக வளர்ந்திருப்பேன் என்றார்.
ராஜாதான் எழுதத் தூண்டினார்...
இதைத் தொடர்ந்து கமலின் படத்தில் இருந்த தீம் மியூசிக் மட்டும் பாடினர். இந்த தீம் இசை வெற்றிக்கு ராஜாதான் காரணம் என்றார் கமல். அதுமட்டுமல்லாது விருமாண்டி படத்தில் இயக்குநராக இருந்த என்னை பாடல் எழுத வைத்தது ராஜாதான் என்றார் கமல். "ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லை..." என்ற முதல் அடியை எடுத்துக் கொடுத்து எழுத வைத்தார் இளையராஜா என்று கூறினார்.
60 வருஷம் பேச வச்சிருவார்
"சொர்க்கம் மதுவிலே"... என்ற பாடலை கவுதம் உற்சாகமாகப் பாடப் பாட கமல் உற்சாகமாகிவிட்டார். இந்தப் பாடல் இந்த அளவிற்கு இத்தனை தலைமுறை தாண்டி பேசுவதற்கு காரணம் ராஜாதான். இதை பாலு கேட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பார் என்றார் கமல். ராஜாவிடம் இதை பாடிக்காட்டு உன்னை 60 வருஷம் வரைக்கும் பிரபலமாக்கிடுவார் என்றார்.
காதல் இளவரசன் டூ உலகநாயகன்
சூப்பர் சிங்கர் டி20 சிறப்பு நிகழ்ச்சியில் கமல் காதல் இளவரசனாக இருந்தபோது நடித்த படங்கள் முதல் இன்றைக்கு உலக நாயகனாக உயர்ந்தது வரை நடித்த படங்களில் இருந்து பாடல்களைப் பாடுகின்றனர் குழுவினர். டிசம்பர் 25 முதல் மூன்று நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு இரவும் தொடர்கிறது. இதுநாள்வரை நிகழ்ச்சியைப் பார்க்காமல் தவற விட்டவர்கள் இன்றைக்குப் பார்க்கலாம்.
Post a Comment