டெல்லி: 'டேம் 999' திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக உத்தவிட்டுள்ளது.
தமிழக அரசு ‘டேம்999' என்ற திரைப்படத்தை வெளியிட தடை செய்தது. கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி இந்த படம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அணை உடைந்து வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுவது போல இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் முன்னதாக 24-ந் தேதியே இந்த படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்தது. இந்த படம் தமிழ்நாடு-கேரளா இடையே உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை திரையிட்டால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு கூறியது.
இந்த தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக நவம்பர் மாதம் 30-ந் தேதி முதல் 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த திரைப்படம் தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் திரையிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் திரையிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு மாநிலத்தின் அச்ச உணர்வுகளை தவிர்த்துவிட்டு தனி நபரின் உரிமைகளை கோர்ட்டு கருத்தில் கொள்ள முடியாது. மாநிலத்தின் அதிருப்தியை பார்க்காமல் நாங்கள் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. இந்த வழக்கு முற்றிலும் சட்டம் சார்ந்தது. மக்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Post a Comment