பொங்கல் பண்டிகை என்பது உற்றார் உறவினர்களுடன் கூடி கொண்டாடி மகிழும் பண்டிகை. சன்டிவியில் நாதஸ்வரம் தொடரில் நடிக்கும் நடிகர்கள் இணைந்து கலாட்டா பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை சுந்தராபுரம், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் இருந்து பொங்கல் கொண்டாட அதிக அளவில் அழைப்பு அனுப்பியிருந்தனர். இதனால் நாதஸ்வரம் குடும்பத்தினர் அனைவரும் அங்கு சென்று பொங்கல் வைத்து விளையாட்டு போட்டிகளில் விளையாடி மகிழ்ந்தனர். இது மாட்டுப்பொங்கல் தினத்தன்று மாலையில் ஒளிபரப்பானது.
நாதஸ்வரம் குடும்பம் ஒற்றுமையாக இருந்தாலும் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்து கொள்வார்கள். சொக்கலிங்கம், மயில் குடும்பத்தினர் ஒருபக்கம் என்றால் அவர்களின் சம்பந்தி நெல்லியாண்டவரின் மனைவி லீலாவதி அவர்களுக்கு எதிராக பேசி வருவார். அது பொங்கல் கொண்டாட்டத்திலும் எதிரொலித்தது.
யாருடைய பொங்கல் பொங்கும்
ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் தனித்தனியாக பொங்கல் வைக்க கிளம்பினார்கள். யாருடைய பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர்களுடைய பொங்கலைத்தான் சுவாமிக்கு படைக்கவேண்டும் என்று தெரிவிக்கவே போட்டி போட்டுக்கொண்டு பொங்கல் வைத்தனர்.
விளையாட்டு போட்டியில் கலக்கல்
இதனிடையே விளையாட்டுப் போட்டி வேறு நடைபெற்றது. அண்டாவில் உள்ள தண்ணீரை எடுத்துக்கொண்டுபோய் பாட்டிலில் ஊற்றவேண்டும் என்பதுதான் போட்டி. கடைசிவரைக்கும் யாருமே பாட்டிலில் தண்ணீரை ஊற்றவில்லை. அதேபோல் சைக்கிள் போட்டியில் ஹீரோ கோபிதான் முதல்பரிசை தட்டிச் சென்றார்.
இவர்கள் எல்லோரும் விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்த கடைசியில் ஒருவழியாக பொங்கல் பொங்கியது. குடும்பத்தினர் அனைவரும் பொங்கலோ பொங்கல் என உற்சாக கூச்சலிட இனிதே முடிந்தது நாதஸ்வரம் குடும்பத்தின் கலாட்டா பொங்கல்
Post a Comment