தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் காணச் சென்ற ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டுகிறது போலீஸ்

|

Kamal Fans Throng Viswaroopam Theaters

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதைத் தொடர்ந்து இன்று இந்தப் படத்தை காணும் ஆவலுடன் தியேட்டர்களின் குவிந்த ரசிகர்களை வெளியேற்றிய போலீசார், அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

பெரும் போராட்டத்திற்குப் பின்னர் நேற்று இரவு விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்ற பெஞ்சில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் விஸ்வரூபம் திரையிடப்பட உள்ள தியேட்டர்களின் முன்பாக கமல் ரசிகர்கள் குவிந்து நிற்கின்றனர்.

சில தியேட்டர்களில் படத்தைப் போட்டு விட்டனர். இருப்பினும் சில ஊர்களில் தியேட்டர்களில் 12 மணிக்கு மேல்தான் முதல் காட்சி என்று அறிவித்துள்ளதால் ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.

தியேட்டர்களை விட்டு விரட்டப்பட்ட ரசிகர்கள்

ஆனால் போலீஸார் திடீரென இன்று கமல் ஹாசன் ரசிகர்களுக்கு எதிராக மாறினர். தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்களை அவர்கள் படமெல்லாம் போட மாட்டாங்க என்று கூறி தடியடி நடத்தி விரட்டியடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் போலீஸார் ரசிகர்களை விரட்டியடிப்பதாக தவகல்கள் வந்து கொண்டுள்ளன.

திருப்பூரில் காத்திருப்பு

திருப்பூரைப் பொறுத்தவரை யுனிவர்சல், உஷா மெகா உள்ளிட்ட7 தியேட்டர்களில் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காலை முதலே ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர். இருப்பினும் படம் இன்னும் திரையிடப்படவில்லை. 12 மணிக்குமேல்தான் முதல் காட்சி என்று அங்கு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் வெளியே காத்து நிற்கின்றனர்.

படம் தொடர்பான பிளக்ஸ் போர்டுகளையும் கூட தியேட்டருக்கு வெளியே வைக்கவில்லை. கோர்ட் உத்தரவு வந்த பிறகே வெளியில் வைப்போம் என்று தியேட்டர் நிர்வாகம் கூறிவிட்டன.

சேலத்தில் ரசிகர்கள் மீது தடியடி

இதற்கிடையே சேலத்தில் இன்று காலை கேயெஸ் தியேட்டர், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் குவிந்து விட்டனர். ஆனால் அவர்களைப் போலீஸார் திடீரென தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்கள் தடையை மீறிப் போக முயன்றனர். இதையடுத்து படம் இப்போது கிடையாது என்று கூறிய போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தியதால் அவர்கள் கலைந்து ஓடினர்.

இதை இன்று சென்னையில் அளித்த பேட்டியிலும் கமல் குற்றச்சாட்டாக முன் வைத்தார். எனது ரசிகர்களை போலீசார் தியேட்டர்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர் என்றார்.

 

Post a Comment