விஸ்வரூபம் வெளியிட்ட சென்னை தியேட்டர்கள் மீது தாக்குதல்- பேனர்கள் எரிப்பு

|

Viswaroopam Banner Torched Chennai

சென்னை: சென்னையில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது சிலர் கல்வீசியும், தீவைத்து எரித்தும் தாக்குதல் தொடுத்ததால் பரபரப்பு நிலவுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் விஸ்வரூபம்திரைப்படம் திரைக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் திரண்டுள்ளனர். அத்தனை தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் எழும்பூரில் உள்ள ஆல்பட் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பேனரைசிலர் தீவைத்து எரித்து விட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ பரவமால் தடுக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

தேவி தியேட்டரிலும் தீவைப்பு

இதேபோல இன்று காலை, அண்ணாசாலையில் உள்ள தேவி தியேட்டர் முன்பு மத்திய சென்னை மாவட்ட கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரமேஷ் மற்றும் ரசிகர்கள் விஸ்வரூபம் படத்துக்கான பேனரை காலை 6 மணி அளவில் வைத்தனர். அதை அங்கு வந்த ஒரு கும்பல் பெட்ரோல் ஊற்றி பேனரை எரித்து விட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தியேட்டரின் மெயின் வாசல் அருகில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

விஸ்வரூபம் படத்தின் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் தேவி தியேட்டர் முன்பு கமல் ரசிகர்களும் திரண்டனர். அவர்கள் பேனர் எரிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் அப்படியெல்லாம் தீவைப்பு சம்பவங்கள் நடக்கவில்லையே என்று போலீஸார் மகா அமைதியாக பதிலளித்தனர். உண்மையில் தீயில் எரிந்த பேனரை போலீஸாரே எடுத்து மறைத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஏஜிஎஸ் தியேட்டர் மீது கல்வீச்சு

அதேபோல சென்னை வில்லிவாக்கத்தி்ல் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் இன்று சிலர் திரண்டு வந்து கல்வீச்சில் இறங்கினர். இதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.மேலும் தியேட்டருக்கு முன்பு டயர்களையும் போட்டுத் தீவைத்து எரித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் ரசிகர் காட்சியுடன் நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்

சென்னையில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அடுத்து திருப்பூரில் ரசிகர் காட்சியுடன் படம் நிறுத்தப்பட்டது. தாக்குதலை தடுக்க தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திருப்பூரில் உஷா மெகா, எஸ்.ஏ.பி, ஸ்ரீசக்தி, யுனிவர்சல் உள்ளிட்ட 7 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படுவதை ஒட்டி காலை முதலே ரசிகர்கள் திரண்டனர்

ரசிகர் மன்ற காட்சி

காலை 6 மணிக்கு எஸ்.ஏ.பி தியேட்டரில் ரசிகர் மன்ற காட்சி திரையிடப்பட்டது. பிற தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம். படம் திரையிடப்படவில்லை. சில தியேட்டர்களில் ப்ளக்ஸ் பேனர்களை கூட வைக்க அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டரின் அனுமதி கிடைத்தபின்னர்தான் படம் திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொன்னதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

திருப்பூரில் அனைத்து தியேட்டர் வாசல்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலும் பேனர்கள் எரிக்கப்பட்டதாலும் இங்கும் அதுபோல சம்பவங்களை ஏற்படாமல் தடுக்க போலீஸ் காவல் நிற்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் பாதியில் நிறுத்தம்

ஈரோட்டில் மிகமுக்கியமான பகுதியில் உள்ள திரையரங்கில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 15 நிமிடத்தில் திரைப்படம் நிறுத்தப்பட்டது.

நாகையிலும் சிக்கல்

இதேபோல நாகப்பட்டினம் பாண்டியன் திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. விஸ்வரூபம் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர். ஆனால் திடீரென அங்கு வந்த வட்டாட்சியர், திரையரங்கு உரிமையாளரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி, திரைப்படத்தைப் பாதியில் நிறுத்தச் சொன்னார். இதை அடுத்து, படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

திருப்பரங்குன்றம் கலைவாணியிலும் படம் நிறுத்தம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் கலைவாணி திரையரங்கில் இன்று காலை விஸ்வரூபம் படம் திரையிடப்பட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி உடனே நிறுத்தும்படி கட்டளை வந்ததால், படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகள் பெரும் கோபம் அடைந்து பிரச்னையில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் குதித்தனர்.

 

Post a Comment