நண்பன் கமலுக்கு கைகொடுக்க வருகிறார் ரஜினி?

|

Rajini Tries Make Peace Between Govt And Kamal

சென்னை: இக்கட்டான சூழலில் உள்ள தனது 40 ஆண்டுகால நண்பன் கமல் ஹாஸனுடன் போனில் பேசிய ரஜினி, அமைதி காக்குமாறு அறிவுறுத்தினார்.

ரஜினி - கமல் இருவரும் திரையில் மரியாதைக்குரிய போட்டியாளர்களாகவும், நிஜத்தில் நட்புக்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

உழைப்பாளி சமயத்தில் ரஜினிக்கு நெருக்கடி ஏற்பட்ட போது கமல் உதவிக்கு வந்தார். அதே போல கமலுக்கு எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் முதல் குரல் கொடுப்பவராகத் திகழ்கிறார் சூப்பர் ஸ்டார்.

இந்த விஸ்வரூபம் விவகாரத்திலேயே கூட, கமலை அரசும் இஸ்லாமிய அமைப்புகளும் நெருக்கடிக்குள்ளாக்கிய போது முதல் அறிக்கை வெளியிட்டவர் ரஜினிதான். அதன்பிறகுதான் பாரதிராஜா போன்றவர்கள் குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில், பிரச்சினை மிகத் தீவிரமடைந்து கமல் இந்த நாட்டைவிட்டே வெளியேறுகிறேன் என்று மனம் வெதும்பி அறிவித்துள்ளதால், அதிர்ச்சியடைந்த ரஜினி, கமலுடன் உடனடியாக போனில் பேசினார்.

கமல் வைத்த பிரஸ்மீட்டுக்கே நேரில் வருவதாக ரஜினி கூறியுள்ளார். ஆனால் வேண்டாம், பிரஸ் மீட் முடிந்ததும் சந்திக்கலாம் என்று கமல் கூறியதால் வரவில்லை. இன்று இரவு அவர் கமலைச் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தை விட்டு கமல் வெளியேறுவேன் என்று கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட ரஜினி, "அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் விட வேண்டாம். நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். பொறுமையாக இருங்கள்," என்று அறிவுறுத்தினாராம்.

ஏற்கெனவே கமலை இக்கட்டிலிருந்து மீட்க ரஜினி வேறு சில முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.

கமல் வீட்டுக்கு விரைந்த நட்சத்திரங்கள்

ரஜினி தவிர, பாரதிராஜா, வைரமுத்து, சரத்குமார், ராதிகா, பிரகாஷ் ராஜ், சிம்பு, சினேகா, பிரசன்னா என பலரும் கமலை நேரில் சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

 

Post a Comment