சென்னை: விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சேபித்துள்ள சில காட்சிகளை மட்டும் நீக்கி விட கமல்ஹாசன் தரப்பு சம்மதம் தெரிவிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் இதுகுறித்து நாளைய கோர்ட் விசாரணையின்போதுதான் உறுதியாக எதுவும் தெரிய வரும்.
விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்கள் குறித்த பல காட்சிகளுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன. இப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் கொச்சைப்படுத்துவதாக, இழிவுபடுத்துவதாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து அப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்தத் தடையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் கமல்ஹாசன். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி வெங்கட்ராமன் நேற்று படத்தைப் பார்த்தார். நாளை தனது உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளார்.
இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சேபிக்கும் காட்சிகளை மட்டும் நீக்கி விட கமல்ஹாசன் சம்மதித்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. இதுகுறித்து நாளை கோர்ட்டில் முறைப்படி கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒருவேளை சர்ச்சைக் காட்சிகளை நீக்க கமல்ஹாசன் முன்வரும் பட்சத்தில் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்று தெரிகிறது. இதனால் தமிழகத்திலும், புதுவையிலும் விஸ்வரூபம் படத்தைத் திரையிட வழி பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எதுவாக இருந்தாலும் நாளைதான் தெரியும்.
Post a Comment