மும்பை: பிக் பாக்ஸ் ரியாலிட்டி ஷோ நடத்தப்படும் வீட்டில் இன்று அதிகாலை 3 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மும்பையில் இருந்து 63 மைல் தொலைவில் உள்ள லோனாவ்லாவில் இருக்கும் பெரிய பங்களாவில் நடந்து வந்தது. அந்த பங்களாவில் அழகான தோட்டம், நீச்சல் குளம், ஜிம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்தன.
அந்த வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீர் என்று தீ பிடித்தது. இதைப் பார்த்த காவலாளி உடனே இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முற்றிலும் சேதமடைந்துவிட்டது. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் 2 வாரத்திற்கு முன்பு தான் முடிந்ததால் அந்த வீட்டில் யாரும் இல்லை. அதனால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாகத் தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
Post a Comment