புலிகள் நடமாடும் தேனி - கூடலூர் மலைப் பகுதியில் சூர்யா கலந்து கொண்ட சிங்கம் 2 படப்பிடிப்பு நடந்தது. இது இப்போது சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் சிங்கம் 2. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது இதன் படப்பிடிப்பு. மாற்றான் சரியாகப் போகாத வருத்தத்தில் உள்ள ரசிகர்களை, சூர்யாவின் முறுக்கேற்றும் ஸ்டில்கள் உற்சாகம் கொள்ள வைத்துள்ளன.
இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேக்கடியில் நடந்தது. அன்று இரவு பெரியாறு புலிகள் சரணாலய பகுதியான முல்லைக்கொடி என்ற இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான பங்களாவில் தங்கினார்.
இந்த இடத்துக்கு தேக்கடி படகு நிறுத்த பகுதியில் இருந்து படகு மூலம் சென்று 24 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் ஜீப்பில் செல்ல வேண்டும். நடிகர் சூர்யாவை அப்பகுதியில் தங்க வைப்பதற்கு கேரள வனத்துறையினர் இரவு 8 மணிக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.
கடந்த வருடம் கேரள வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார் இரவு 8 மணிக்கு மேல் தேக்கடி படகு நிறுத்தத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள லேக் பேலஸ் என்ற இடத்துக்கு சென்றார். இதற்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியதால் அவர் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆனால் இப்போது நடிகர் சூர்யாவை 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கேரள வனத்துறையினரே அழைத்துச் சென்றுள்ளனர்.
புலிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் நடமாடும் ஆபத்தான பகுதிக்கு சூர்யாவை அழைத்துப் போய் தங்க வைத்தது இப்போது விசாரணை வரை போய்விட்டதாம்.
Post a Comment