பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்கிறது.
இந்தப்படத்துக்கு தான் இசையமைக்காவிட்டாலும் தன் நண்பன் பாரதிராஜாவுக்காக, விழாவுக்கு தலைமை ஏற்க ஒப்புக் கொண்டுள்ளார் இசைஞானி இளையராஜா.
மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் பாரதிராஜா தயாரித்து இயக்கியுள்ள படம் அன்னக் கொடியும் கொடி வீரனும். புதுமுகம் லட்சுமணன் ஹீரோவாக நடிக்க, கார்த்திகா நாயகியாக நடிக்கிறார். மனோஜ் கே பாரதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது இந்தப் படம். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் ஜனவரி 20ம் தேதி பிரமாண்டமாக நடக்கிறது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜா தலைமை ஏற்கிறார்.
பாடல்களை இயக்குநர் மணிரத்னம் வெளியிட, இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
படத்தின் ட்ரைலரை கே பாக்யராஜ், கங்கை அமரன் மற்றும் விக்ரமன் வெளியிட, நடிகர் வடிவேலு, ராதா உள்ளிட்டோர் பெற்றுக் கொள்கின்றனர்.
அரசடி ரயில்வே கிரவுண்டில் இந்த விழா நடக்கிறது.
தான் இசையமைக்காவிட்டாலும், நட்புக்கு மரியாதை கொடுத்து இசைஞானி இளையராஜா சமீபத்தில் கமல் பட விழாவில் பங்கேற்று இசை வெளியிட்டார். இப்போது அதே மரியாதையை தன் இன்னொரு நண்பர் பாரதிராஜாவுக்கும் செய்கிறார்!
Post a Comment