பெங்களூர்: பாதுகாப்பு தருவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து கர்நாடகத்தில் இன்று மீண்டும் விஸ்வரூபம் ரிலீஸானது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் உள்ளிட்ட சில இடங்களில் கடந்த 25ம் தேதி விஸ்வரூபம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் மறுத்ததையடுத்து படம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து பெங்களூரில் 17 தியேட்டர்கள் உள்பட மாநிலத்தில் மொத்தம் 40 தியேட்டர்களில் இன்று விஸ்வரூபம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. மதியக் காட்சி முதல் இந்தப் படம் பெங்களூரில் 17 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
இந்த 17 தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல்லாகிவிட்டதாக படத்தின் கர்நாடக மாநில வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்கராஜு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
முஸ்லிம் தலைவர்கள் குழு பெங்களூர் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜியை சந்தித்து படத்தில் 'அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல' என்ற வரியைச் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த வரியை பட தலைப்பு போடுகையில் சேர்க்க முடிவு செய்தேன்.
கடந்த 27ம் தேதி படத்தைப் பார்த்த கமிஷ்னர் மிர்ஜி, அதில் ஆட்சேபமிக்கும் வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்தார் என்றார்.
Post a Comment