சென்னை: தன் கதையைத் திருட்டுத்தனமாக விற்றதாக என்மேல் குற்றம்சாட்டும் பாக்யராஜ் மீது வழக்குப் போடுவேன் என்று கூறியுள்ளார் பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி.
தான் எழுதி இயக்கி நடித்த இன்று போய் நாளை வா படத்தை அதன் கதை உரிமையாளராகிய தன்னைக் கேட்காமல், பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பெரிய விலைக்கு விற்றுவிட்டார் என்று இயக்குநர் கே பாக்யராஜ் புகார் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இன்னும் இதில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் அந்தப் படம் நாளை வெளியாகவிருக்கிறது.
கதை எழுதியவர் பாக்யராஜ். அதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை யாருக்கும் விற்கவில்லை என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் கதையின் உரிமை தன்னிடம் இருப்பதாக சொல்லி அதனை ராமநாராயணனுக்கு பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விற்றுள்ளதாக பாக்யராஜ் குற்றம்சாட்டினார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்துள்ளார்.
பாக்யராஜ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து புஷ்பா கந்தசாமி கூறுகையில், "பாக்யராஜ் தேவை இல்லாமல் என்னை இந்த பிரச்சினையில் இழுத்துள்ளார். அவரை சந்தித்து 'இன்று போய் நாளை வா' படத்தின் உரிமையை நான் கேட்டதாக சொல்லி உள்ளார். அதில் உண்மை இல்லை. பாக்யராஜை இதற்காக நான் சந்திக்கவே இல்லை. தமிழ் படங்களை தமிழிலேயே "ரீமேக்" செய்யும் வழக்கம் முன்பெல்லாம் கிடையாது.
ஆனால் இப்போது அதை செய்ய தொடங்கி உள்ளனர். இது போல் படங்களை 'ரீமேக்' செய்கிறவர்கள் அதன் கதைக்கான உரிமை யாரிடம் இருக்கிறதோ அவரை அணுகி வாங்கிக் கொள்கின்றனர். படத்தின் இயக்குனருக்கு பணத்தை செட்டில் செய்யும் போது கதைக்கான உரிமையை எழுதி வாங்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.
இன்று போய் நாளை வா படத்தை பொறுத்த வரை சட்டப்படி உறுதிப்படுத்திய பிறகே நான் வாங்கினேன். இதில் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளதாக பாக்யராஜ் நினைக்கிறார். அது தவறு.
யாரையும் ஏமாற்றும் எண்ணம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்தும் நான் வரவில்லை. இந்த பிரச்சினையில் என்னை இழுத்தால் பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்," என்று கூறியுள்ளார்.
கதை உரிமை தன்னிடமே உள்ளது என பாக்யராஜ் ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார். ஆனால் கதை உரிமையை யாரிடமோ வாங்கியதாக புஷ்பாகந்தசாமி கூறியுள்ளார். பாக்யராஜுக்கு உரிமையுள்ள கதையை சம்பந்தமே இல்லாத புஷ்பா கந்தசாமி விற்றதோடு, இப்போது பாக்யராஜ் மீதே வழக்குப் போடப் போவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்கது!
Post a Comment