சென்னை: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய தாலாட்டு 18வது நூற்றாண்டில் எழுதப்பட்ட மலையாள தாலாட்டு பாடலில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லைப் ஆப் பை படத்தில் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய தாலாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அப்படத்தை பார்த்த கேரள மக்கள் ஜெயஸ்ரீ எழுதிய தாலாட்டு ஓமனத்திங்கள் கெடாவோ என்ற பிரபல மலையாள தாலாட்டு போன்றே உள்ளது என்று தெரிவித்தனர். ஓமனத்திங்கள் கெடாவோ என்ற பாடல் 18வது நூற்றாண்டில் இறையிம்மன் தம்பி என்பவரால் எழுதப்பட்ட தாலாட்டாகும்.
கேரளத்து மக்களில் இத்தாலாட்டை கேட்டிராதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இன்றும் பிரபலமாக உள்ள தாலாட்டு பாடல் ஆகும். இந்நிலையில் தம்பியின் வம்சத்தைச் சேர்ந்தவரும், தம்பி அறக்கட்டளை செயலாளருமான ருக்மிணி பாய் கூறுகையில்,
ஜெயஸ்ரீ தம்பியின் பாடலை காப்பியடித்துள்ளார். அவர் எங்களிடம் அனுமதி பெறவே இல்லை. நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது வழக்கு தொடர்வோம். அவர் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
ஜெயஸ்ரீ எழுதி பாடியுள்ள பாட்டில் முதல் 8 வரிகள் தம்பியின் தாலாட்டில் வருவது போன்றே உள்ளது. ஆனால் தன் மனதில் பட்டதை பாட்டாக எழுதியதாக ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Post a Comment