முல்லா உமர் தமிழகத்தில் வசித்ததற்கு கமல் ஆதாரம் தர வேண்டும்! - மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு

|

New Case On Kamal Madurai Court

மதுரை: தலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர் முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் எழிலரசு. இவர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "நடிகர் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் தமிழக போலீசாரிடம் மனு கொடுத்தனர்.

இதற்கிடையே முஸ்லிம் சமுதாயம் குறித்து தவறாக விமரிசனம் செய்திருப்பதாக கூறி இந்த படத்திற்கு தமிழ கத்தில் 15 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தை திரைப்பட தணிக்கை குழுவினர் பார்வையிட்டு பொதுமக்கள் அனைவரும் பார்க்கத்தகுந்த படம் என்று சான்றிதழ் வழங்கி உள்ளது.

திரைப்பட தணிக்கைத் துறை சான்றளித்த பிறகு ஒரு படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை நாட்டில் கருத்துக்களை வெளியிடும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது.

இதேபோலத்தான் சமீபத்தில் திரைக்கு வந்த துப்பாக்கி படத்திற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு அந்த படம் திரைக்கு வந்தது. அமெரிக்காவில் வெளியான ஒரு குறும்படத்திற்கு எதிராகவும் இங்கு போராட்டம் நடத்தினார்கள். இது சுய விளம்பரங்களுக்காக செய்யும் போராட்டம்போல தோன்றுகிறது.

எனவே விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துடன் தலீபான் இயக்கத்தின் தளபதி முல்லா உமர் மதுரையிலும், கோவையிலும் வசித்தார் என்ற கமல்ஹாசனின் தரப்பு கருத்துக்கு அவரிடம் உள்ள ஆதாரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்," என்று கோரியுள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

 

Post a Comment