விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகளை நீக்க கமல் சம்மதம்!

|

Kamal Edit Certain Parts Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் படத்தில் சில காட்சிகளை நீக்கவும் மாற்றவும் நடிகர் கமல் ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இன்று காங்கிரஸ் எம்பி ஜே.எம்.ஆரூண், கவிஞர் வைரமுத்து ஆகியோர் சில இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினர். அப்போது இந்தப் படத்தில் சில ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை சுட்டிக் காட்டி அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கமல், எனது முஸ்லீம் குடும்ப நண்பர்கள் என்னை அணுகி பிரச்சனையைத் தீர்க்க உதவ வேண்டும் என்றனர். விஸ்வரூபம் படப் பிரச்சனை குறித்து என்னிடம் பேசினர். இந்த பிரச்சனையை தீர்க்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

படத்தில் சர்ச்சைக்குள்ள காட்சிகள், வசனங்கள் அடங்கிய பட்டியலை என்னிடம் அளித்தனர். இதற்கு சுமூகத் தீர்வு காணும் வகையில் குறிப்பிட்ட சில காட்சிகளை மாற்றுவது என்று முடிவு செய்துள்ளேன்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனில் இருந்து சில வாசகங்களை படத்தில் நான் பயன்படுத்தியுள்ளது தங்களை புண்படுத்துவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர். அதனால் இறைமறை வசனங்களை நீக்குவது என்று தீர்மானித்துள்ளேன். சில காட்சிகளையும் எடிட் செய்ய உள்ளேன்.

இதனால் எங்களுக்குள் இனி பிரச்சனை இல்லை. குறிப்பாக எனக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

இந்தப் படப் பிரச்சனைகளால் சில விரும்பத்தாக சம்பவங்கள் நடந்து வருவதாக எனக்கு தகவல்கள் வருகின்றன. வேறு ஏதும் பிரச்சனை ஏற்பட நான் காரணமாக இருக்க விரும்பவில்லை. என் சகோதர்களுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.

இனி இஸ்லாமியர்களுக்கும், எனது இஸ்லாமிய ரசிகர்களுக்கும், பொதுவாக எனது ரசிகர்களுக்கும் பாதுகாப்பு தர வேண்டியதும், சட்டம் ஒழுங்கை பேண வேண்டியதும் அரசின், காவல்துறையின் கடமை என்றார்.

கமலின் இந்த அறிவிப்பு குறித்து 24 இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆருண் பேச்சு நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால், விஸ்வரூபத்துக்கு இஸ்லாமியர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு அகலலாம். ஆனால், அரசின் எதிர்ப்பு அகலுமா என்பது தெரியவில்லை.

 

Post a Comment