சென்னை: கமல்ஹாசன் என்ற ஒரு கலைஞனுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்காக ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலைகுணிய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
விஸ்வரூபம் சர்ச்சை குறித்து பாரதிராஜா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒவ்வொரு தமிழனும் வெட்கித்தலை குணிய வேண்டும். நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது, எழுத்தாளனும், கலைஞனும், படைப்பாளியும்தான். அனைவருக்கும் பாலமாக இருந்து பெருமை தேடித் தருகிறவர்கள் இவர்கள்தான். கலைஞன் அழிந்தால் கலை அழியும், கலை அழிந்தால் மொழி அழியும், மொழி அழிந்தால் இனம் அழியும், இனம் அழிந்தால் பிணம் திண்ணும் கழுகுகள்தான் பறக்கும். அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வரக் கூடாது.
கலைக்காக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஒரு கலைஞனை கீறி ரணம் பார்த்து ரத்த ருசி பார்ப்பது தமிழகத்தின் சாபக்கேடாக முடிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
கமல் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் வெட்கித் தலை குணிய வேண்டிய நிலை ஏற்படும். இன்னும் நீதியின் பாலும், சட்டத்தின்பாலும் நம்பிக்கையுடன் உள்ளோம்.
கண்ணகி கோபப்பட்டாள், அன்று மதுரை எரிந்தது. இன்று ஒரு கலைஞனை வேதனையுறச் செய்துள்ளார்கள். அதனால் தமிழகமே எரிந்து போய் விடுமோ என்று அஞ்சுகிறேன்.
கமல் என்ன தவறு செய்து விட்டான்... நடப்புநிகழ்ச்சியைச் சொன்னான். அது தவறா.. பின்லேடனையும், முல்லா உமரையும் தீவிரவாதிகள் என்று சொல்வது தவறா.. கஜினி முகம்மது கொள்ளையடித்தான் என்று பேசினால் அது தவறா.. அப்படியென்றால் அதைப் பாடப் புத்தகத்திலிருந்தே எடுத்து விடுங்கள்.
தயவு செய்து நல்ல கலைஞனை வாழ விடுங்கள். இல்லாவிட்டால் அத்தனை கலைஞர்களின் பெருமூச்சும், தீமூச்சாக மாறி விடும் என்றார் பாரதிராஜா.
Post a Comment