சென்னை: தமிழகத்தில் இன்னும் வெளியாகாத கமல் ஹாஸனின் விஸ்வரூபம் பட திருட்டு டிவிடி மற்றும் படப் பதிவுகளை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு இரண்டு வார காலம் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இத் திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் திரையிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து கமல் ரசிகர்கள் சிலர் பக்கத்து மாநிலங்களுக்குப் போய் படம் பார்க்கின்றனர்.
இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து திருட்டு டிவிடி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலமாக தமிழகத்துக்குள் விஸ்வரூபம் திரைப்படம் பொதுமக்களிடத்தில் பரவி விடக்கூடாது என்பதில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.
அதன்படி, தமிழக குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப் உத்தரவின் பேரில், டிஐஜி ஜான் நிக்கல்சன் மேற்பார்வையில், எஸ்.பி.விஜயகுமாரி தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகையா அடங்கிய திருட்டு விடியோ தடுப்புப் பிரிவினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள கணினி மையங்கள், பேருந்து நிலையங்கள், பயணிகள் தங்கும் விடுதிகள், ஆம்னி பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாரேனும் இது தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவர் என்று திருட்டு விடியோ தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment