சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், கமல்ஹாசனை சாடிப் பேசியதோடு பாராட்டும்படியாகவும் பேசினார்.
அதாவது அவர் கூறுகையில், விஸ்வரூபம் படம் ரிலீஸாகாமல் தடை செய்யப்பட்டிருப்பதால், ரசிகர்களுக்கு ரிசர்வேஷன் பணம் திருப்பித் தரப்படவில்லை. இது கமல்ஹாசனின் ஏமாற்று வேலை என்றெல்லாம் பேசினார். ஆனால் அதே வாய் கமல்ஹாசனை வேறு மாதிரியாகவும் பேசியது.
அந்தப் பேச்சு...
கமல்ஹாசன் என் நண்பர். அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. என்றாலும், விஸ்வரூபம் பட பிரச்சினை பற்றிய என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
கமல், அடாவடியான ஆள் கிடையாது. அவரை, 7 வயதில் இருந்தே எனக்கு தெரியும். சினிமா ஒன்றுதான் சாதி-மதத்துக்கு அப்பாற்பட்டது. அதற்குள் சாதி-மத பிரச்சினையை கொண்டுவரக்கூடாது. விஸ்வரூபம் பட பிரச்சினையில், கமல்ஹாசனும், முஸ்லிம்களும் மீண்டும் ஒரு முறை சந்தித்துப்பேசி, ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கி, சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ரிசர்வேஷன் செய்த பணத்தை உடனே திரும்ப கொடுத்துவிட வேண்டும். சினிமாவில் பணம் ஒரே இடத்தில் முடங்கக்கூடாது. அப்படி முடங்கினால், அது மற்ற படங்களை பாதிக்கும்.
நான், சினிமாவுக்கு வந்து 66 வருடங்கள் ஆகிறது. 45 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த வகையில், இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறேன் என்றார் முக்தா.
Post a Comment