மும்பை: மும்பையில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை ரன்பீர் கபூரும், சிறந்த நடிகைக்கான விருதினை வித்யா பாலனும் பெற்றனர். சிறந்த இந்தி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 'பர்பி' 7 விருதுகளை தட்டிச் சென்றது.
இந்திய அளவில் சினிமாத்துறையினருக்கு தரப்படும் மிக முக்கியமான விருது பிலிம்பேர் விருது. 58வது ‘பிலிம் பேர்' விருதுகள் வழங்கும் விழா அந்தேரியில் உள்ள ஒய்.ஆர்.எஃப் ஸ்டுடியோவில் நேற்றிரவு நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் நடனம்.... நடிகர், நடிகையர்களின் ரெட் கார்பெட் அணிவகுப்பு என கலர்ஃபுல்லாக இருந்தது விழா அரங்கம்.
இந்த ஆண்டிற்கான சிறந்த பாலிவுட் திரைப்படமாக ‘பர்பி' தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் சிறந்தநடிகர், சிறந்த இசை உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதினை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதினை இந்த ஆண்டு ‘பர்பி' படத்துக்காக நடிகர் ரன்பிர் கபூர் பெற்றார். இவர் கடந்த ஆண்டு ‘ராக் ஸ்டார்' படத்தில் நடித்ததற்காக சென்ற ஆண்டின் சிறந்த கதாநாயகனுக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார்.
தொடர்ந்து 2 வது முறையாக
‘கஹானி' படத்தில் கதாநாயகியாக நடித்த வித்யா பாலன், இம்முறையும் சிறந்த நடிகை விருதினை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ‘டர்ட்டி பிக்சர்' படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யா பாலன் இவ்விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இலியானவுக்கு விருது
தென்னிந்திய நடிகையான இலியானா முதன் முறையாக பர்பி படத்தில் அறிமுகமானர். இந்த படத்தில் இலியானாவின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அவருக்கு சிறந்த புதுமுக நாயகி விருது கிடைத்துள்ளது.
சிறந்த இயக்குநருக்கான விருதினை கஹானி பட இயக்குநர் சுஜாய் கோஷ் பெற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது யாஷ் சோப்ராவிற்கு வழங்கப்பட்டது.
ஆடல் பாடல் நடனம்
விழா மேடையில் ஷாருக்கான், சயீப் அலிகான் ஆகியோரின் நடனங்கள் இடம்பெற்றன. அதேபோல் நடிகை கத்ரீனா கைப் நடனம் அமர்களப்படுத்தியது. பிரபல பாப் பாடகி உஷா உதூப்பின் பாடல்களுக்கு திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் உற்சாகமாய் ஆட்டம் போட்டனர்
Post a Comment