இந்தியாவில் நாங்கள் மிக பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக உள்ளோம்: பாக். அமைச்சருக்கு ஷாருக் பதிலடி

|

Shahrukh Khan Slams Pakistan Rehman Malik Over Security

மும்பை: தான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பத்திரிக்கை ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவில் முஸ்லிம்கள் பற்றிய தவறான கருத்துகளுக்கு அரசியல் தலைவர்கள் சில சமயம் என்னை ஒரு சின்னமாக ஆக்கிவிடுகின்றனர். நான் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருப்பதாக சில சமயங்களில் என் மீது குற்றம் சுமத்தினர். இத்தனைக்கும் நான் ஒரு இந்தியன், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர் என் தந்தை. என்னை என் தாய்நாட்டை விட்டுவிட்டு 'என் தாய்நாடு' என்று அவர்கள் கருதும் நாட்டுக்கு என்னை போகச் சொல்லி தலைவர்கள் பேரணிகள் நடத்தினர் என்றார்.

இதையடுத்து ஷாருக்கிற்கு இந்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கோரிக்கை விடுத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மாலிக்கின் கருத்து குறித்து ஷாருக் கூறுகையில்,

நான் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாக உள்ளேன். நான் எழுதிய கட்டுரையில் நான் இந்தியாவில் பாதுகாப்பில்லாமல் இருப்பதாக எங்குமே இல்லை. என் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளோம்.

இவ்வாறு சிலர் அறிவுரை கூறுவதற்கு காரணம் அவர்கள் நான் எழுதிய கட்டுரையை படிக்காமல் பிறர் கூறியதை வைத்து கருத்து தெரிவிப்பது தான் என்று நினைக்கிறேன். அதனால் முதலில் கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

 

Post a Comment