சென்னை: என் மகள் ஒரு நடிகை ஆக தன் கேரியரைத் தேர்வு செய்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என்றார் ஆக்ஷன் கிங் அர்ஜூன்.
நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' என்ற படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமாகிறார். மைக்கேல் ராயப்பன் எம்எல்ஏ தயாரிக்கும் இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார்.
ஐஸ்வர்யாவை நிருபர்களுக்கு இன்று முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார் அர்ஜுன்.
அப்போது அவர் கூறுகையில், "30 ஆண்டுகளாகிறது நான் சினிமாத் துறைக்கு வந்து. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக எத்தனையோ முறை பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளேன்.
ஆனால் இந்த சந்திப்பு வித்தியாசமானது. என் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்தும் சந்திப்பு இது. எனக்கு பெருமையாக இருக்கிறது. பணம், புகழ், நண்பர்கள், சந்தோஷம் எல்லாமே இந்த சினிமாவில்தான் எனக்கு கிடைத்தது. சோறு போட்ட அந்த துறையில் என் மகளை அறிமுகப்படுத்துவதில் எனக்குப் பெருமை.
இதனை கேள்விப்பட்டு பலர் பாராட்டினர். இன்னும் சிலர் ஆண் என்றால் பரவாயில்லை. பெண்ணாக இருக்கிறாளே...? பரவாயில்லையா என்றனர். நல்லது, கெட்டது எல்லா துறையிலும் இருக்கிறது. நாம் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது. என் பெண்ணை பையன் மாதிரிதான் வளர்த்துள்ளேன். அவளுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அவளை அவள் பார்த்துக் கொள்வாள் என்று அவர்களுக்கெல்லாம் பதில் சொன்னேன்.
சினிமா என் வீடு. நானே உள்ளே போக பயந்தால் மற்றவர்கள் எப்படி வருவார்கள். அதனால்தான் என் பெண்ணை குடும்பத்துடன், மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி உள்ளேன். பூபதி பாண்டியன் திறமையான இயக்குனர். அவர் சொன்ன கதை பிடித்திருந்தது.
விஷால் நாயகனாக நடிப்பது இன்னொரு மகிழ்ச்சி. ஏற்கனவே நான் இயக்கிய வேதம் படத்தில் விஷால் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். சுறுசுறுப்பானவர். அவர் பார்த்து வளர்ந்த பெண்தான் என் மகள்," என்றார்.
Post a Comment