டெல்லி: கபில் சிபல் ஒரு நல்ல சட்ட வல்லுநர், திறமையான அமைச்சர், நல்ல பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியும். ஆனால் அவர் நல்ல இந்தி இலக்கியவாதி என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. குறிப்பாக தென்னிந்தியாவில். அதுவும் அவர் அபாரமான கவிஞர் என்பது நிறையப் பேருக்குத் தெரியவே தெரியாது. தற்போது கவிஞர் கபில் சிபல், இந்திப் படம் ஒன்றுக்கு ஒரு அருமையான காதல் பாடலை எழுதி, அதுவும் ஹிட்டாகி விட்டது.
தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பணியில் கடும் பிசியாக இருந்து வந்தபோதிலும் இந்திப் படத்துக்கும் அவர் பாடல் எழுத நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இயக்குநர் ஆதித்யா ஓம் என்பவரின் புதிய இந்திப் படமான பந்தூக் படத்தில்தான் சிபலின் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்படத்துக்கு பாடல் எழுத வேண்டும் என்று ஓம், சிபலை அணுகியபோது மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டாராம் சிபல். இதையடுத்து நான்கு பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார். அதில் ஒன்றைப் படத்தில் பயன்படுத்தியுள்ளார் ஓம்.
இரு காதலர்களின் பிரிவின் வலியை அழகான வார்த்தைகளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட வடித்துள்ளாராம் கபில் சிபல். உண்மையிலேயே இந்தப் பாடல் மிகவும் நயமாகவும், ரசணையாகவும் வந்திருப்பதாக இயக்குநர் ஓம் சிலாகித்துக் கூறுகிறார்.
இலக்கியத்தில் அவருக்கு உள்ள நல்ல ஞானமே இந்தப் பாடல் கவிநயத்துடன் மிளிர முக்கியக் காரணம் என்கிறார் ஓம். அந்தப் பாடலில் வரும் ஒரு வரியைப் பாருங்கள்...
காதல் மிளிரும் உன் கண்கள்
வெட்கம் பூத்த புன்னகை
அமைதியாகச் சொன்னாய் உன் காதலை...
இந்த மாதத்தில் இப்படம் திரைக்கு வருகிறதாம். 64 வயதாகும் கபில் சிபல், ஏற்கனவே 2 கவிதைப் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது பந்தூக் படத்தின் பாடல் ரிங்டோன்களாகவும் மாறி இந்திக்காரர்களை ரசிக்க வைத்து வருகிறதாம்.
Post a Comment