கமலும் இஸ்லாமிய அமைப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்வதுதான் நல்லது- சீமான்

|

Kamal Has Talk With Islamic Organisations Seeman

சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் கமலும் இஸ்லாமிய அமைப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான்.
அவர் பேசுகையில், "ஈழத்தில் இன உறவுகள் கொலைகளை தடுக்க முடியவில்லை. அதற்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் 4ம் ஆண்டு நினவு தினம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.

தமிழர் இனத்துக்கு உரிமை எதுவும் இல்லை. வழக்காடும் உரிமை, அரசியல் உரிமை, மொழி உரிமை எதுவும் இல்லை. மத்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி தமிழகத்தில் மட்டும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கவில்லை என்கிறார்.

ஆனால் வேறு இடத்தில் இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இப்படி பயிற்சி கொடுத்ததால் 554 மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊழலற்ற, உண்மையான மக்களாட்சி நமக்கு தேவை. இளைஞர்கள்தான் அதை பொறுப்பேற்று செய்யவேண்டும். ஆங்கிலத்துக்கு அடிமையாக இருக்கிறோம். மொழி, சாதி, அரசியல் கடவுள் என அனைத்திற்கும் அடிமையாக உள்ளோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம்," என்றார்.

அவரிடம் விஸ்வரூபம் குறித்து கேட்கப்பட்டது. தமிழக அரசின் தடையை கமல் ஏற்று, காட்சிகளை மாற்ற வேண்டும் என நீங்கள் கருத்து கூறியதாக செய்தி வந்துள்ளதே என்று கேட்ட போது, "நான் அப்படிச் சொல்லவில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் போன்ற முக்கிய விஷயங்களை முன்னிறுத்தி தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு இது.

கமலஹாசனின் 'விஸ்வரூபம்' படத்தை பார்க்காமல் எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது. இஸ்லாமியர்களும், கமல்ஹாசனும் இதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் அப்போதும் சொன்னேன்," என்றார்.

 

Post a Comment