விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல் முறையீடு!

|

Tn Govt File Appeal Petition Against Viswaroopam

சென்னை: விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான தடை நீக்கத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு. இதற்கான அனுமதியை தலைமை நீதிபதி (எலிப்பி தர்மாராவ்) வழங்கினார்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு, தமிழக அரசு விதித்த இரு வார கால தடை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் விதித்திருந்த 144 தடை உத்தரவை நீக்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.

இதனையடுத்து, விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிரான சிக்கல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் உத்தரவை அடுத்து, இந்த உத்தரவு அமுலுக்கு வருவதை புதன் கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்டது. ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எலிபி தர்மாராவை அவரது இல்லத்தில், இரவு 11. 30 மணி அளவில் சந்தித்த அரசு வழக்கறிஞர்கள் குழு, மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை பெற்றது. இதனையடுத்து இந்த மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விஸ்வரூபம் இன்று வெளியாவதும் கஷ்டமே.

 

Post a Comment