எத்தனை முறை ஏமாந்தாலும் புத்தியின்றி மறுபடி மறுபடி ஏமாந்து கொண்டே இருப்பது சிலரது வழக்கம். ஒரு முறை ஏமாந்துவிட்டு பின்னர் சுதாரித்துக் கொள்வது சிலரது பழக்கம். ஏமாறுபவர்களைப் பற்றியும் ஏமாற்றுபவர்களைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதினாலும், எத்தனை திரைப்படங்களை எடுத்தாலும் அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் கையில் உள்ள பணத்தை மோசடி நிறுவனங்களிடம் கொடுத்து ஏமாறுவதுதான் இன்றைய தமிழர்களின் நிலையாகிவிட்டது.
இதுபோன்று ஏமாந்து போனவர்களை வைத்து விஜய் டிவியில் ஞாயிறு இரவு நீயா? நானா? நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய ஏமாந்து போனவர்கள் எல்லோருமே ஏதோ ‘ஜஸ்ட் லைக் தட்' என்பது போல பேசினார்கள்.
அதை விட கொடுமை ஏமாந்து போனவர்கள் அதை விவரிக்கும் போது எதிர் அணியினர் சிரித்ததுதான். ரூம் போட்டு யோசிப்பார்கள். ஆனால் ரூம் போட்டு ஏமாந்த கதையை விவரித்தார் ஒரு நபர். அதைக் கேட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் விழுந்து விழுந்து சிரித்தார்.
ஆயிரக்கணக்கில் ஏமாந்து போனவர்கள் கூட சுதாரித்து விட்டனர். ஆனால் லட்சக்கணக்கில் ஏமாந்தவர்கள்தான் அடுத்தடுத்து தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருந்திருக்கின்றனர். இதை விட கொடுமை ஒருவர் தொடர்ந்து பத்து வருடங்களாக ஏமாந்து வந்திருக்கிறார் என்பதுதான்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை அநியாயமான இழந்திருக்கின்றனர். இதை விட முக்கியமான விசயம் பணத்தை இழந்தவர்கள் எல்லோருமே நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள். பேரசையின் காரணமாகவே பணத்தை இழந்துவிட்டு தவிக்கின்றனர் என்று ஒரு சாரார் பேசினர்.
சரியான வழிகாட்டுதல் இல்லை. மோசடி செய்தவர்களை தண்டிக்கவோ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவோ தமிழக அரசு தவறிவிட்டது இதன் காரணமாகவே மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட நூறு கோடி மோசடிகள் இன்றைக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டது.
கேரளாவில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடிக்குப் பின்னர் அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுவிட்டன. அதனால் மக்கள் ஏமாறவில்லை. தமிழ்நாட்டில் அதுபோல் சட்டங்கள் எதுவும் இல்லை என்றார் நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினரான மூத்த வழக்கறிஞர் காந்தி, ஏமாறுபவர்கள் எல்லோரும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறார்கள். இதுவும் ஒரு ரேஸ் போலத்தான் என்று கூறி அதிர்ச்சியளித்தார்.
அதே சமயம் நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினரான நிதி ஆலோசகர் புகழேந்தி, மக்கள் ஏமாறாமல் இருப்பது எப்படி என்றும் வேறு எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகின்றனர். மெடிக்ளெய்ம், இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் கூட அதிக அளவில் மக்களை ஏமாற்றுகின்றன என்றார்.
கள்ளத்தனமாக பணம் சம்பாதித்தவர்கள் முதலீடு செய்து ஏமாந்து போவது பெரிய விசயமாக தெரியாது. ஆனால் நடுத்தர குடும்பத்தில் வசிப்பவர்கள், ஏழைகள், ஓய்வூதிய காலத்தில் கிடைத்த பணத்தையும் முதலீடு செய்துவிட்டு ஏமாந்து போனவர்களின் நிலைதான் சிரமம்.
எத்தனை முறை ஏமாந்தாலும் நான் ஏமாந்து கொண்டேதான் இருப்பேன் என்று ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பர இடைவேளை விடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசியவர்களை விட விளம்பரம்தான் அதிகம் இருந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிக விளம்பரம் கிடைத்தால் பேசுபவர்களின் கருத்தை ஒளிபரப்பிவிட்டு இரண்டு வாரங்களுக்கு ஒரு நிகழ்ச்சி என்று போடலாமே. அதை விட்டுவிட்டு வெறும் விளம்பரமாக போட்டு விஜய் டிவியும் நேயர்களை ஏமாற்றிவிட்டது என்றே கூறலாம்.
Post a Comment