சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் இன்று காலை திடீரென யுட்யூப் வீடியோ தளத்தில் வெளியானது.
அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் அந்த வீடியோ இடம்பெற்ற கணக்கு முடக்கப்பட்டது.
விஸ்வரூபம் படம் சில வெளிநாடுகளில் வெளியான இரண்டாம் நாள் நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னும் சில வெளிநாடுகளில் ஓடிக்கொண்டுள்ளது. மற்ற நாடுகளைப் பொறுத்தவரை, படம் வெளியான இரண்டாவது வாரமே ஒரிஜினல் டிவிடிகளே வந்துவிடும் நிலை உள்ளது.
இந்த சூழலில் தமிழகம் - புதுவையில் முழு தடையும், மற்ற மாநிலங்களில் பகுதி தடையும் விதிக்கப்பட்டுள்ள விஸ்வரூபத்துக்கு, வெளிநாடுகளிலிருந்து திருட்டு டிவிடிகள் வரத் தொடங்கிவிட்டன. சென்னையில் மிக சுலபத்தில் ரூ 25-க்கே டிவிடிக்கள் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், விஸ்வரூபம் முழுப் படத்தையும் சிலர் இன்று யுட்யூப் தளத்தில் பதிவேற்றிவிட்டனர். இது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு உளவுத்துறை தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக அந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
யூ டியூபில் விஸ்வரூபத்தை வெளியிட்டது யார் எனவும், அதை பதிவிறக்கம் செய்தவர்கள் யார் எனவும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment