சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டு, படத்துக்கும் தடை விதித்தனர்.
மேலும் இது குறித்து வரும் பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 6ம் தேதி இறுதி விசாரணை நடத்த நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.
தீர்ப்பு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு பேட்டியளித்த கமல் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில் தடை நீட்டிப்பு செய்யப்பட்டதால் இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
Post a Comment