மிச்சமுள்ள தியேட்டர்களையும் மூடப் பார்க்கிறார் கமல்- தியேட்டர் உரிமையாளர்கள் கோபம்

|

Exhibitors Angry On Kamal Hassan

திருச்சி: டிடிஎச்சில் வெளியாகும் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படத்தை எக்காரணம் கொண்டும் திரையிடப் போவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இறுதி முடிவு எடுத்துள்ளனர்.

கமலின் இந்த முயற்சி மிச்சமிள்ள 1000 அரங்குகளையும் மூடும் முயற்சி என்றும், தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் திருச்சி மாயாஸ் ஓட்டலில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.என்.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

இந்த அவசர கூட்டத்தில் கூட்டத்திற்கு பின்பு தியேட்டர்கள் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், விநோகஸ்தர்கள் பெடரேசனின் தலைவர் சேலம் முருகேசன் ஆகியோர் நிருபர்களிடம் பேசினர்.

அவர்கள் கூறுகையில், "விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவது திரையரங்குகளை நடத்த விடாமல் செய்யும் முயற்சியாகும். இனி விஸ்வரூபம் மட்டுமல்ல, டிடிஎச்சில் வெளியாகும் எந்தப் படத்துக்கும் தியேட்டர் தர முடியாது.

டி.டி.எச்சில் வெளியிட்ட பின்னர் எளிதாக அந்தப் படங்கள் திருட்டு டிவிடிகளாகவும், கேபிள் டிவிகளிலும் வெளியாகிவிடப் போகிறது. அப்புறம் எந்த ரசிகன் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பான்?

ஏற்கெனவே தமிழகத்தில் இருந்த அரங்குகளில் 50 சதவீதம் மூடப்பட்டுவிட்டது. இப்போது கமல் எடுத்துள்ள முடிவு மிச்சமுள்ள தியேட்டர்களையும் மூடவே வழிவகுக்கும்.

டி.டி.எச் மூலம் ஒரு திரைப்படத்தை வெளியிட்ட பிறகு அதை தியேட்டரில் திரையிட மாட்டோம் என்று ஏற்கெனவே மும்பை, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். ஆனால் அங்கெல்லாம் தியேட்டர்கள் தருவதாக கமல் பொய் கூறி வருகிறார்," என்றனர்.

 

Post a Comment