கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
அவரது ரெட் ஜெயன்ட் மூவீஸ்தான் இந்தப் படத்தை சேலத்தில் விநியோகிக்க உள்ளது.
விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதாக கமல் அறிவித்ததால், படத்தை எந்த விநியோகஸ்தரும் சீண்டவில்லை. 45 தியேட்டர்கள் தவிர மற்ற அனைத்து அரங்குகளும் படத்தைப் புறக்கணித்தன.
இதனால் கமல் மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தார். இந்த நிலையில், அவரது கலைப் பணியை மதிக்கும் வகையில், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன் விளைவாக, விஸ்வரூபம் முதலில் தியேட்டர்களிலும், 7 நாட்கள் கழித்து டிடிச்சிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டது. கமல் ஹாஸனுக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகை இது என்று திரையுலகின் அனைத்து சங்கங்களும் அறிவித்தன.
இந்த சமரச முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, விஸ்வரூபம் படத்தின் ஏரியாக்களை விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொள்ள முன்வந்தனர்.
அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
இதில் சேலம் பகுதி விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் வாங்கியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment