அரசாங்கங்களையே மாற்றும் சக்தி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி - இயக்குநர் சேகர் கம்முலா

|

Rajini Can Change The Govts Sekhar Kammula

சென்னை: அரசாங்கத்தையே மாற்றும் சக்தி மிக்கவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த மாமனிதரை வைத்து லீடர் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன், என்று கூறியுள்ளார் பிரபல தெலுங்குப் பட இயக்குநர் சேகர் கம்முலா.

தனது முதல் படமான டாலர் ட்ரீம்ஸுக்காக தேசிய விருது பெற்றவர் சேகர் கம்முலா. தொடர்ந்து அவர் இயக்கிய கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைப் ஈஸ் பியூட்டிபுல் படங்கள் விருதுகளையும் வசூலையும் குவித்தவை. குறிப்பாக லீடர் படம் தெலுங்கு தெரியாதவர்களையும் ஈர்த்தது. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்த புதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் சேகர் கம்முலா பேசுகையில், "இத்தனை ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்ற உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவர்கள் யாரும் இல்லை. சினிமா உலகின் அடையாளம் அவர்தான்.

லீடர் படத்தை இயக்கிய பிறகு, எப்படியாவது ரஜினியைச் சந்தித்துவிட முயன்றேன். ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. லீடர் படத்தை ரஜினியை வைத்து தமிழில் இயக்க விரும்புகிறேன். அந்த ரோலுக்கு அவரை விட பொருத்தமானவர் யாரும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, அரசாங்கங்களையே மாற்றும் சக்தி அவருக்குத்தான் உள்ளதென நம்புகிறேன். அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்., ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பொருத்தமானவர் அவர். யெஸ்.. எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் லீடர் ரீமேக்கில் அவரை இயக்க மனசார ஆசைப்படுகிறேன் " என்றார்.

 

Post a Comment