சென்னை: கமலின் விஸ்வரூபம் பட பிரச்சனை தீர்ந்துள்ளதையடுத்து படம் வரும் 7ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் வரும் 15ம் தேதி படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறப்படுகிறது.
கமலின் விஸ்வரூபம் படம் முதலில் டிடிஎச்சில் தான் ரிலீஸாவதாக இருந்தது. இணைப்பு ஒன்றுக்கு ரூ.1,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்சனையை கிளப்பியதால் முதலில் தியேட்டரிலும், அதன் பிறகு ஒரு வாரம் கழித்து டிடிஎச்சிலும் ரிலீஸ் செய்வது என்று உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களிலும், பிப்ரவரி 2ல் டிடிஎச்சிலும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி தமிழகத்தில் உள்ள 24 முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து படத்தை 2 வாரத்திற்கு ரிலீஸ் செய்ய தடை விதித்து தமிழக அரசு கடந்த 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு தமிழக அரசும், முஸ்லிம் அமைப்புகளும் வழக்குகள் தொடர்ந்தன.
இந்நிலையில் கமல் தரப்பும், முஸ்லிம் அமைப்புகளும் பிரச்சனையை பேசித் தீர்த்துள்ளன. தமிழக அரசும் தடையை வாபஸ் பெற்றதால் படம் வரும் 7ம் தேதி 500 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. ஒரு வாரம் கழித்து வரும் 15ம் தேதி டிடிஎச்சில் ஒளிபரப்பப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து கமல் டிடிஎச் நிறுவனத்துடன் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இணைப்பு ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக்கக்கூடும்.
Post a Comment