விஸ்வரூபத்துக்கு சிக்கல் தீர்ந்தது.. ஆனால்.. விஷாலுக்கு புது நெருக்கடி!

|

Vishal Big Trouble

சென்னை: விஸ்வரூபத்தை சிக்கலிலிருந்து காப்பாற்ற நடிகர் சங்கம் குரல் கொடுக்கவில்லையே என்று ட்விட்டரில் குறைகூறிய விஷாலுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது நடிகர் சங்கம்.

அவரை சங்கத்திலிருந்து ஏன் விலக்கக் கூடாது என்று சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கார சார விவாதம் நடந்துள்ளது.

விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கோபமாகக் கேட்டிருந்தாராம் விஷால்.

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தை இழிவுபடுத்திய விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி பேசினர். இதையடுத்து விஷால் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, "விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் சங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தது. விஷால் பேஸ்புக்கில் நடிகர் சங்கத்தை விமர்சித்து கருத்து தெரிவித்தது குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நடிகர் சங்க செயற்குழுவிலும் இது குறித்து பேசப்பட்டது.

விஷால் இதுவரை நடிகர் சங்கம் கூட்டிய பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்றது இல்லை. ஆனாலும் அவரது பிரச்சினைகளை சங்கம் தீர்த்து வைத்துள்ளது. லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் பிரச்சினை உருவான போது நடிகர் சங்கம் தலையிட்டது.

விஷாலுக்கு பக்கபலமாக நின்று உதவியது. நானும் சங்கத்தின் தலைவர் சரத்குமார், பொருளாளர் வாகை சந்திரசேகர் போன்றோரும் 250 படங்களுக்கு மேல் நடித்தவர்கள். பொதுக்குழுவுக்கே வராத விஷாலுக்கு எங்களை பார்த்து கேள்வி கேட்க தகுதி இல்லை.

விஷாலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். 15 நாட்களுக்குள் அவர் பதில் சொல்ல வேண்டும். விளக்கம் அளித்த பிறகு ஏற்க கூடியதாக இருந்தால் ஏற்போம். பதில் ஏற்கும்படி இல்லா விட்டால் நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது பற்றி முடிவு செய்யப்படும்," என்றார்

தீராத விளையாட்டுப் பிள்ளை படம் தொடர்பாக ஏற்கெனவே சங்கத்தின் தலைவர் சரத்குமார் மனைவி ராதிகாவுக்கும் விஷாலுக்கும் பிரச்சினை உள்ளது.

மேலும் சரத் மகள் வரலட்சுமி - விஷால் தொடர்பு கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. மதகஜராஜாவில் விஷாலுக்கு ஒரு ஜோடியாக சரத் மகள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment