சென்னை: கடல் பட நஷ்டத்திற்கும், மெட்ராஸ் டாக்கீஸுக்கும் தொடர்பில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில்,அவரது மெட்ரீஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான கடல் படம் படுதோல்வி அடைந்துள்ளது. பட ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே ஓவர் பில்ட் அப் கொடுக்கவே படம் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கையில் வாங்கிய வினியோகஸ்தர்கள் தற்போது நஷ்டப்பட்டு நிற்கின்றனர்.
இதையடுத்து அவர்கள் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள மணிரத்னத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அலுவலகத்திற்குள் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர்.
இதையடுத்து போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மெட்ராஸ் டாக்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது,
"கடல்" திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ் மார்ச் மாதம் 2012ம் ஆண்டிலேயே ஜெமினி இன்டஸ்ட்ரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மினிமம் காரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது.
இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக்கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வேறெந்த நபரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அணுகவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment