போதையில் பறந்த கார்... சினிமா உதவி இயக்குனரை விரட்டிப் பிடித்த போலீஸ்

|

மும்பை: மும்பையில் குடிபோதையில் கார் ஓட்டிய உதவி பாலிவுட் உதவி இயக்குநரை மும்பை போலீசார் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர்.

மும்பையில் உள்ள மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஜோகேஷ்வரி பகுதி நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்த ஒரு கார், போலீஸ் வேன் நின்றிருப்பதை பார்த்ததும் 'யூ டர்ன்' அடித்து வந்த வழியே மின்னல் வேகத்தில் பறந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனில் ஏறி அந்த காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

அந்த காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத அவர்கள், கட்டுப்பாட்டு அறையின் மூலம் அப்பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் உஷார் படுத்தினார்கள்.

சினிமா பாணியில் சேஸிங்

சினிமாவில் வரும் 'கார் சேஸ்' காட்சி போல் 15 நிமிடம் வரை நீடித்தது. விடாமல் துரத்திய போலீசார், பெஷ்ராம் பாக் பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். டிரைவரை வெளியே வரச்சொன்னபோது அவர் நிற்க கூட நிதானமில்லாத நிலையில் இருந்தது தெரியவந்தது. காரின் பின் இருக்கையில் இளம் பெண் ஒருவரும் போதையில் அமர்ந்திருந்தார். விசாரணையில் காரின் டிரைவர் பெயர் மார்க் சாமுவேல் என்பதும், சமீபத்தில் வெளியான 'டபாங் 2' இந்தி திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பதும் தெரிய வந்தது.

லைசென்ஸ் இல்லை

இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்த போது அவர்கள் போலீசாருடன் தகராறு செய்தனர். எனினும், போலீசார் அவர்களை குண்டுகட்டாக வேனில் தூக்கி போட்டு ஜோகேஷ்வரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மார்க் சாமுவேலிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் கூட இல்லாதது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

 

Post a Comment