குழந்தைகளை ரொம்ப மிஸ் பண்றோம்... நீயா நானாவில் அழுத பெற்றோர்

|

Neeya Naana Parents Vs Children

குழந்தைகளுடன் நட்பு பாரட்டுவது என்பது எல்லோருக்கும் கைவந்துவிடாது. அது ஒரு விதமான அனுபவம். கடந்த காலங்களில் குட்டிப்பிள்ளைகளுக்கு கதை சொல்லவும், அவர்களின் மொழிகளை புரிந்து கொண்டு உரையாடவும், தாத்தா பாட்டிகள் இருந்தனர். ஆனால் இன்றைக்கு பெற்றோர்களும் வேலைக்கு போய்விடுகின்றனர். தாத்தா பாட்டிகளும் உடன் இருப்பதில்லை. எனவே குழந்தைகள் தனித்து விடப்பட்டு தொலைக்காட்சிகளும், கணினியுமே அவர்களின் பொழுதுபோக்கு சாதனங்களாகிவிட்டது.

இதனால் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிறது. பிள்ளைகளின் உலகத்தை புரிந்து கொள்ள முடியாத பெற்றோர்களும், பெற்றோர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காத பிள்ளைகளும்தான் இன்றைக்கு அதிகம் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்து அவர்களின் கருத்துக்களை பரிமாறியது இந்த வார விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி.

பெற்றோரிடம் சொல்லத் தயங்கிய சில விசயங்களை டிவி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர் குட்டீஸ்கள். அப்பா குறட்டை விட்டா பிடிக்காது. வீடு கூட்ட பிடிக்காது என்றனர் பிஞ்சு குழந்தைகள். எனக்கு இருட்டு என்றால் பயம் என்றது ஒரு வாண்டு.

அதேபோல் குழந்தைகள் எதற்கு எல்லாம் தங்களை கடுப்பேத்துவார்கள் என்று பகிர்ந்து கொண்டனர் பெற்றோர். அதில் சில பெற்றோர்கள் தங்களில் பிள்ளைகளுக்குக் கொடுத்த தண்டனைகள் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

வேலைக்குப் போவதனால் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியாமல் இருப்பதாக சில பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அதேபோல் ஆத்திரத்தில் அடித்துவிட்டு பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட வலிக்காக அழுத கதைகளை சில பெற்றோர்கள் கூறினார்கள்.

வேலை ஓட்டத்தில், அவசர கதியில் இருக்கும் போது சொல் பேச்சு கேட்காத பிள்ளைகளை நாங்கள் அடித்துதானே ஆகவேண்டும் என்று கேட்டனர் பெற்றோர்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் இளங்கோ கல்லானை பிள்ளைகளின் உலகத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ப பெற்றோர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்றார்.

இன்றைக்கு குழந்தைகளுக்கான இசையோ, பாடலோ இல்லை, கதைகளும் கூட புனையப்படுவதில்லை. கார்டூன் உலகத்தில் கற்பனையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஆதங்கப்பட்டார் அவர்.

அதேசமயம் மற்றொரு சிறப்பு விருந்தினரான மோகன், குழந்தைகளை அவர்களுக்கான உலகம் என்று பிரித்து பார்க்கத் தேவையில்லை, அவர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களை புரிந்து கொண்டு அவர்களை டியூன் செய்யவேண்டும் என்று கூறினார்.

எது எப்படி என்றாலும் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இணைப்பு பாலமாக இருப்பது தாத்தா பாட்டிகள்தான் அந்த மூத்த குடிமக்கள் இருக்கும் வீடுகளில் இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதில்லை என்பது அனுபவ பூர்வமான உண்மைதான்.

இந்த வாரம் குழந்தைகளின் உலகத்தை புரிய வைத்த விஜய் டிவி இனி வரும் வாரத்தில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் கருத்துக்களை பதிவு செய்ய உள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் உளவியல் ரீதியிலான சிக்கல்களையும் சில உண்மைகளை புரிந்து கொள்ள முடியும் என்று கூறலாம்.

 

Post a Comment