என் சீனை படத்திலிருந்து தூக்கிட்டாங்களே... வேதனையில் தூக்கில் தொங்கிய இளம் நடிகர்!

|

சென்னை: நீதானே என் பொன்வசந்தம், சென்னையில் ஒரு நாள் படங்களில் தான் நடித்த படத்தின் காட்சிகளைத் தூக்கிவிட்டார்களே என்ற வேதனையில் ஒரு இளம் நடிகர் தூக்கில் தொங்கிய பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

அதன் விவரம்:

ஆந்திர மாநிலம் கடப்பாவை பூர்விகமாக கொண்ட சீனிவாசராவ்-ராஜேஸ்வரி தம்பதி திருச்செங்கோட்டிபல் வேலை நிமித்தம் செட்டிலாகிவிட்டனர். இவர்களுக்கு சந்திரசேகரராவ் (25), பவன்குமார் (20) என்ற இருமகன்கள்

சந்திரசேகரராவ் ஈரோட்டில் பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரியில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தார். நல்ல அழகாக இருப்பார். படிப்பில் மட்டுமல்லாது கல்லூரி கலை விழாக்களில் நடிப்பிலும் அசத்திய சந்திரசேகரராவுக்கு சினிமா ஆசை துளிர்த்தது.

நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தால் படிப்பு முடிந்ததும் சினிமா காதலியை தேடி சென்னைக்கு சென்றார்.

3 ஆண்டுகள் அலையாய் அலைந்த பிறகு அவருக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் ஒரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிறு வேடம்தான். சந்திரசேகராவுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை.

அடுத்து 'சென்னையில் ஒரு நாள்' என்ற படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. 3 வருட அலைச்சலுக்கு பலன் கிடைத்ததாக தன் நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தார்.

இந்த இரு படங்களும் வெளியான பிறகு தியேட்டருக்கு நண்பக்களுடன் போய் பார்த்தார். இன்னும் ஊரிலிருக்கும் நண்பர்களுக்கும் சொல்லிவிட்டார்.

ஆனால் படத்தைப் பார்த்தால் பயங்கர ஏமாற்றம் சந்திரசேகருக்கு. அவர் நடித்த எந்தக் காட்சிகளும் இந்தப் படங்களில் இல்லை.

இரண்டு படங்களிலும் தனது காட்சிகள் இடம் பெறாததால் சந்திரசேகரராவ் நொறுங்கி போனார். நண்பர்களும் பெற்றோரும் எவ்வளவோ சொன்னாலும் அவரால் சமாதானம் அடைய முடியவில்லை.

நேற்று முன்தினம் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சந்திரசேகரராவின் பெற்றோர் ஹைதராபாத் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சந்திரசேகரராவ் ஒரு நைலான் கயிற்றில் முடிச்சு போட்டு தன் கதையை முடித்து கொண்டார்.

நேற்று போனில் தொடர்பு கொண்ட பலர் சந்திரசேகரராவ் போனை எடுக்காததால் அவரது தம்பிக்கு போன் செய்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சந்திரசேகரராவ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

எடிட்டிங் டேபிளைக் கடந்து வந்த பிறகுதான் ஒரு சினிமாவில் யார் யார் நடித்த காட்சிகள் உள்ளன என்பதே தெரியும் என்ற உண்மை தெரியாமல் ஒரு இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டது பலரையும் அதிர வைத்துவிட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களிடம் கருத்துக் கேட்க தொடர்பு கொண்டோம். வேணாம்... எங்களை இதில் இழுத்துவிட்றாதீங்க என்றார்கள்.

 

Post a Comment