பெய்ஜிங்: சீன அரசுக்கு ஆலோசனை கூறும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகர் ஜாக்கி சான்.
இதன் மூலம் சீன அரசியலில் அதிகாரப்பூர்வமாக குதித்துவிட்டார் அவர்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருகிற மார்ச் மாதம் புதிய அதிபராக இவர் பதவி ஏற்கிறார்.
இந்த ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவை அமைத்து புதிய உறுப்பினர்களை நியமித்து வருகிறார் புதிய அதிபராகப் போகும் ஜின்பிங். சீன பாராளுமன்றத்தின் ஒரு சபையான இதில் 2,237 இடங்கள் உள்ளன.
இக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பிரபல நடிகர் ஜாக்கிசான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பதவியை சந்தோஷத்துடன் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க பத்திரிகைகளில் சீன தலைவர்கள் ஊழல்வாதிகள் என கட்டுரை வெளியாகி இருந்தது. அதை எதிர்த்து ஜாக்கிசான் கடுமையாக சாடினார். உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான் என கருத்து தெரிவித்து இருந்தார். சீன தலைவர்களை வானளாவ புகழ்ந்திருந்தார்.
ஜாக்கியின் இந்த அமோக ஆதரவுக்காகத்தான் இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Post a Comment