அமீரின் ஆதிபகவன் - விமர்சனம்

|

நடிப்பு: ஜெயம் ரவி, நீத்து சந்திரா, பாபு ஆன்டனி, சுதா சந்திரன்

ஒளிப்பதிவு: தேவராஜ்

இசை: யுவன் சங்கர் ராஜா

பிஆர்ஓ: நிகில்

தயாரிப்பு: ஜெ அன்பழகன்

எழுத்து - இயக்கம்: அமீர்

கிட்டத்தட்ட ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் அமீர் படம் ஆதி பகவன். என்னதான் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள் என எச்சரிக்கப்பட்டாலும், பருத்திவீரன் மாதிரி ஒரு படம் தந்த இயக்குநரின் படைப்பைக் காண குறைந்தபட்ச ஆவலாவது ரசிகர்களுக்கு இருக்கும் அல்லவா..

ஆனால் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு ஒரு விசிட்டிங் கார்டாகவும், அமீருக்கு தனக்குத் தானே போட்டுக் கொண்ட ரெட் கார்டாகவும் அமைந்துள்ளது.

ammerin aadhi bhagavan review   

தமிழ் சினிமா பல முறை பார்த்துவிட்ட இரட்டைவேட ஆள் மாறாட்டக் கதைதான் ஆதிபகவன்.

தாய்லாந்தில் மிகப் பெரிய டானாக, எந்த குற்றத்துக்கும் அஞ்சாதவராக வலம் வரும் ஆதி (ஜெயம் ரவி 1), நீத்து சந்திராவை ஒரு பாரில் பார்க்கிறார். இரண்டாவது சந்திப்பில் அவரைப் பிடித்துப் போகிறது. ஆதரவற்ற, பல கொடுமைகளை அனுபவிக்கும் பெண்ணான அவரை காப்பாற்றி, திருமணம் செய்யும் அளவுக்குப் போகிறார். அப்போது தன் தந்தையைக் காண மும்பைக்கு வருமாறு நீத்து அழைக்க, அதை ஏற்று ஜெயம் ரவி மும்பைக்கு கிளம்புகிறார்.

அப்போதுதான் நீத்து சந்திரா ஜெயம் ரவியை திருமணம் செய்து கொள்ள அழைத்துப் போகவில்லை... கொலை செய்யத்தான் என்பது தெரிகிறது. கதைக்களம் மும்பைக்குப் போகிறது. அங்கே கொடூர தாதாவாக, திருநங்கைத்தனம் நிரம்பிய பகவான் (ஜெயம் ரவி 2). பகவான் என்று தப்பாக நினைத்து ஆதியை போட்டுத் தள்ள போலீஸ், மைனிங் தாதாக்கள் என பெரிய கூட்டமே தேட, அதிலிருந்தெல்லாம் எப்படி ஆதி தப்பிக்கிறார் என்பது மீதிக் கதை.

ஆதி, பகவன் என இரு பாத்திரங்களில் ஜெயம் ரவி. ஆதியாக வரும்போது அவரது தோற்றமும், உடைகளும், உடல் மொழியும் செம மேன்லி! நீத்து சந்திராவை காப்பாற்ற அவர் போடும் சண்டையும் அருமை.

ஆனால் இந்த வேடத்தை ஜஸ்ட் லைக் தட் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது, ஜெயம் ரவியின் அந்த திருநங்கை பகவான் பாத்திரம். அடி பின்னி எடுத்துவிட்டார். ஆனால் இதையெல்லாம் பிரகாஷ்ராஜ் முன்பே செய்துவிட்டாரே என்பதுதான் மைனஸ்.

ஒரு நடிகராக, ஹீரோவாக ஜெயம் ரவிக்கு இது முக்கிய படம். வெறும் லவ்வர் பாய் அல்லது ரெடிமேட் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றவர் என்ற இமேஜை அடித்து நொறுக்கியிருக்கிறது இந்தப் படம்.

ஹூரோயின் நீத்து சந்திரா. இரண்டாம் பாதியில் இவர்தான் வில்லி எனும் அளவுக்கு டெரர் காட்டியிருக்கிறார். அதுவும் ஜெயம் ரவியுடன் மோதும் காட்சியில் அசத்தியிருக்கிறார். அமீர் படத்தில்தான் இதெல்லாம் சாத்தியம். ஆனாலும் இம்புட்டு இம்புட்டு.. சிகரெட் ஆகாது ஆத்தா!!

இந்த மூன்று பாத்திரங்கள் தவிர, மற்ற எல்லாருமே துணைநடிகர்கள் ரேஞ்சுக்குத்தான் வருகிறார்கள். எனவே அவர்களின் நடிப்பு அல்லது முக்கியத்துவம் குறித்து சொல்ல ஒன்றுமில்லை, சுதா சந்திரன் உள்பட.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், சாக்ஷி ஆடும் அந்த க்ளப் டான்ஸ் மற்றும் காற்றிலே பாடலும் கேட்கும்படி உள்ளன. தேவராஜின் ஒளிப்பதிவு, அமீர் சொன்ன மாதிரி ஒரு Raw Action படமாக ஆதிபகவனைக் காட்டியிருக்கிறது.

பல காட்சிகள் நம்பும்படி இல்லை என்று வெளியில் வந்து சொன்னாலும், பார்க்கும்போது நம்பும் அளவுக்கு வித்தை காட்டியிருப்பது அமீரின் கைவண்ணம்.

ஆனால் நீத்து சந்திரா வரும் இரண்டாவது காட்சியிலேயே அவரது பாத்திரம் இதுதான் என்று ஓரளவு கணிக்க முடிகிறது.

படத்தின் முதல் பாதி முழுக்க எதையோ அழுத்தமாக சொல்ல வருவதுபோன்ற பாவலா தெரிகிறது. ஆனால் எதுவுமே இல்லை. அதேபோலத்தான் இரண்டாவது பாதியும். படத்தின் இந்த தன்மைதான், பார்வையாளர்களை திருப்தியற்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது.

காட்சிகளின் மெதுவான நகர்வு ரொம்ப நேரம் ஊமைக்குத்து வாங்கியதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துப்பாக்கி சண்டைக் காட்சிகள் அனைத்துமே காதுல பூ ரகம்.

இப்படி ஒரு படத்தைத் தர அமீர் 5 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை... ஆறுமாதமே அதிகம்.

ஆதிபகவன் பார்த்த பிறகும், இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம் அமீர்... உங்களால் தரமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்!

-எஸ்.ஷங்கர்

 

Post a Comment