மும்பை: விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று கூறிய தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய திரைப்பட தணிக்கை துறை தெரிவித்துள்ளது.
விஸ்வரூபம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கமலின் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு மத்திய திரைப்பட தணிக்கை துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவரை மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய திரைப்பட தணிக்கை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய சட்ட விதிமுறைகளின்படி திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதனடிப்படையிலேயே விஸ்வரூபமும் மற்ற திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதை உங்கள் முன் வைக்க மத்திய திரைப்பட தணிக்கை துறை விரும்புகிறது.
திரைப்படங்களுக்கு தணிக்கை செய்வதில் 1951ம் ஆண்டிலிருந்து சட்டப்படி மத்தியத் திரைப்பட தணிக்கை துறை செயல்பட்டு வருகிறது. விஸ்வரூபம் பட விவகாரத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை பொறுப்பற்றவை ஆகும்.
இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நவநீத கிருஷ்ணன் கூறுகையில்,
நீதிமன்றத்தில் நடப்பவை குறித்து மூன்றாவது பார்ட்டிக்கு விளக்கம் அளிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ தேவையில்லை. விஸ்வரூபம் படத்தை தணிக்கை செய்ததில் மோசடி நடந்துள்ளது என்று நான் கூறியதில் பொய்யில்லை. நான் கூறியது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம் என்று நீதிபதியிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் மோசடி நடந்திருக்கிறது என்று எனக்கு சந்தேகம் இருந்தது என்றார்.
Post a Comment