சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை பெரும் சிக்கல்களுக்கு மத்தியில் நேற்று தமிழ்நாட்டில் திரையிட்டுள்ளார். படத்திற்குப் பெரும் வரவேற்பு. தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன. கமல்ஹாசனும் நிம்மதியாகக் காணப்படுகிறார்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது தனக்கு உறுதுணையாக நின்ற ரசிகர்கள் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி கூறினார். குறிப்பாக ரசிகர்கள் குறித்து மிகவும் உருக்கமாக, நெகிழ்ச்சியுடன் பேசினார்.
வீட்டுச் சாவியை அனுப்பிய ரசிகர்கள்
ரசிகர்களின் அன்பை தாம் என்ன செய்து தீர்ப்பேன் என்று கூறிய கமல், ரசிகர்கள் பலர் காசோலையாகவும், பணமாகவும், அவர்கள் வீட்டுப் பத்திரங்களையும், ஏன் வீட்டுச் சாவிகளையும் கூட அனுப்பி தம்மை நெகிழ்வுறச் செய்து விட்டதாக கமல் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இப்படிப்பட்ட ரசிகர்களின் அன்புக்கு, எனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் கூட அது ஈடாகாது என்றும் கமல் உருக்கமாக பேசினார்.
மீடியா பங்காளிகள்
அதேபோல பத்திரிக்கையாளர்களையும் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டினார்.
மனதளவில் தனது பங்காளிகளாக செயல்பட்டன ஊடகங்கள் என்று கூறிய கமல், ஊடகங்களுக்கு நன்றி கூறிக் கொண்டார்.
மேலும், சககலைஞர்களின் பாராட்டு தமக்கு உழைக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார் கமல்.
இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தாமே எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் வெற்றியை தந்துள்ளதாகக் கூறிய கமல், எனது கடன்களை அடைத்தே தீருவோம் என்ற வெறியுடன் ரசிகர்கள் இந்த வெற்றியை தமக்கு அளித்துள்ளதாகவும் சொன்னார்.
ஜெ.வை சந்திக்க விருப்பம்
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பமாக உள்ளதாகவும் அவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் கமல் தனது பேட்டியின்போது தெரிவித்தார்.
Post a Comment