சென்னை: மரியான் பட ஷூட்டிங்கில் ஹீரோயின் பார்வதியை உதைக்கிற மாதிரி நடிக்கச் சொல்ல தனுஷோ நிஜமாகவே உதைத்துள்ளார்.
பூ படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது தான் தமிழ் படத்தில் நடிக்கிறார் பார்வதி மேனன். அவர் பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் நடிக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கடந்த 7 ஆண்டுகளில் 7 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அவையும் மலையாளம் மற்றும் பிற மொழிப் படங்கள். இத்தனை ஆண்டுகளில் வெறும் 7 படங்களில் மட்டுமே ஏன் நடித்தாய் என்று நண்பர்கள் பலர் கண்டித்தனர். வாய்ப்பு வரும்போதே அனைத்து படங்களிலும் நடிப்பது எனக்கு சரி என்று படவில்லை.
நல்ல படம், கதைக்காக காத்திருப்பதில் தப்பில்லை. இயக்குநர்களை பொறுத்தே படத்தை தேர்வு செய்கிறேன். பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் வளரலாம். ஆனால் திருப்தி என்பது மிகவும் முக்கியம். நடித்துவிட்டு சென்றால் இரவில் நிம்மதியாக தூங்க முடிய வேண்டும். எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்து அது என் படத்தைப் பார்த்துவிட்டு பெருமைப்பட வேண்டும். மாறாக என்னம்மா இந்த படத்தில் நடித்திருக்கிறியே என்று என்னை திட்டக் கூடாது.
பூ படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் உயிர்ப்புள்ளது. அதன் பிறகு தற்போது மரியான் படத்தில் வரும் பனிமலர் கதாபாத்திரம் சவாலாக உள்ளது. கமர்ஷியல் படத்தில் நடிக்க மாட்டேன் என்றில்லை. கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் நிச்சயம் நடிப்பேன்.
மரியான் ஷூட்டிங்கில் தனுஷ் என்னை உதைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது தனுஷ் நிஜமாகவே என்னை உதைத்துவிட்டார். ஒரு குடும்பமாக உழைக்கையில் அவர் உதைத்தது பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் அந்த காட்சி நன்றாக வந்துள்ளதை அறிந்தபோது சந்தோஷப்பட்டேன் என்றார்.
Post a Comment