ஒடுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தவறா?... நீயா நானாவில் கேள்வி

|

Vijay Tv Neeya Naana College Students Vs Social Worker

இட ஒதுக்கீடு கொடுப்பதனால் அந்த குறிப்பிட்ட சமூகத்தினர்தான் மேலே வருகின்றனர். மற்றவர்கள் எல்லாம் கீழான நிலைக்கு செல்கின்றனர் என்பது இட ஒதுக்கீடு பற்றி இன்றைய இளைய சமூகத்தினரின் பார்வையாக இருக்கிறது.

இன்றைய இளைய சமூதாயத்தினருக்கும், சமூகம், அரசியல் குறித்த விழிப்புணர்வும், சமூகம் பற்றிய பார்வையும் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பற்றி இந்த வார நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் நன்றாக படிக்கும் மாணவர்கள் ஒரு பக்கமும். மற்றொரு பக்கம், சமூக ஊடக அரசியல் களப்பணியாளர்களும் பேசினர்.

காலம் காலமாக பொருளாதார நிலையில் தாழ்ந்து உள்ள மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது பற்றி நிறைய மாணவர்களுக்கு புரிதல் இல்லை. இட ஒதுக்கீடு தேவையில்லை என்பது போலவே பேசினார்கள்.

அதுபோலத்தான் கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை. கூடங்குளம் அணுஉலைக்கு ஆதரவாகத்தான் மாணவர்கள் வாக்களித்தனர்.

அதுபோல மீனவர்கள் பிரச்சினைப் பற்றியோ, இஸ்லாமியர்களுக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி மாணவர்களுக்கு தெரிவதில்லை. இன்றைய கல்வி அமைப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெளிவாக புரியவைத்தது இளைய தலைமுறையினரின் பேச்சு.

அடக்கப்பட்ட தலைமுறைகள் மேலெழுந்து வரவேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. எல்லா சமூகமும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இட ஒதுக்கீடு கொடுத்து அவர்களை கைதூக்கி விடுவதில் தவறேதும் இல்லை என்றனர் களப்பணியாளர்கள்.

ஆனால் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரியில் சேர்ந்தவர்கள் ஒருவித குற்றஉணர்வுடன் பேசினார்கள். தனக்கான உரிமை என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் குற்ற உணர்வோட வாழ்கின்றனர் இது புரிதல் இல்லாத காரணமாக இருக்கலாம் என்றனர் சமூக ஆர்வலர்கள்.

எல்லாரும் நல்லாத்தானே இருக்காங்க? அப்புறம் எதுக்கு இட ஒதுக்கீடு என்பது இன்றைய மாணவர்களின் கேள்வியாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டின் வரலாறு மாணவர்களுக்கு சரியாக சென்றடையவில்லை என்று கூறிய சமூக ஆர்வலர்கள், இன்றைக்கு சென்சிடிவ் பிரச்சினை என்பதை விட சென்சேசனல் பிரச்சினைக்களின் பின்னால் போகின்றனர் என்ற ஊடகவியாலாளர்கள், இட ஒதுக்கீடு என்பது நூற்றாண்டுகளாக நிகழ்ந்த போராட்டம் என்று கூறினர்.

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற எண்ணம் இன்றைக்கு எழுகிறது. இதன் காரணமாக நகரங்களில் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. பெரு நிறுவனங்களில் வேலை கிடைப்பதில்லை. இது அநேகம் பேருக்கு தெரியவில்லை என்று ஆதங்கப்பட்டனர் சமூக ஆர்வலர்கள். இடஒதுக்கீடு பிரச்சினையும், இஸ்லாமியர் பிரச்சினையும் நிறைய பேருக்கு புரிதல் இன்றி இருக்கிறது.

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை என்னென்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு லஞ்சம், பாலியல் பிரச்சினை என்பது பற்றி பேசிய சமூகம் மதுக்கடைகளைப் பற்றி ஒருவர் கூட கூறவில்லை. இது சகஜம் என்பது போல இன்றைய இளையதலைமுறையினர் எடுத்துக்கொண்டு விட்டதுதான்.

மீனவர் பிரச்சினைப் பற்றி ஒரு பார்வை இல்லை, புரிதல் இல்லை. மீன் வாங்குறோம் சாப்பிடுறோம் அவ்வளவுதான் என்பது போல பேசினார் ஒரு மாணவி.

கூடங்குளம் பற்றி சரியான புரிதலே இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்பதே இல்லை. மது ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினை என்பது பற்றி ஒரு மாணவர்கூட தெரியவில்லை.

இதைப்பற்றி யாருமே தெரிவிக்கவில்லை. ஈவ் டீசிங், சட்ட ஒழுங்குப் பிரச்சினைக்கு மதுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது என்று கூறினார் ஒரு சமூக ஆர்வலர்.

இவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைவரின் நலனுக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். எதையும் சுயநலத்தோடு யோசிக்காமல் சமூக உணர்வோடு யோசிக்கவேண்டும் என்றார் பாலை செந்தமிழன்.

தமிழ்நாட்டில் தமிழ் பேப்பர் படிப்பதில்லை, தமிழ் வார இதழ்கள் படிப்பதில்லை. அதே சமயம் ஃபேஸ்புக், டுவிட்டரில் பொழுது போக்காக கமெண்ட் செய்வதில் ஆர்வம் காட்டுவது ஏன் கோபத்தோடு கேட்டார் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத். தமிழ்பேப்பர்களில் சமூக பிரச்சினைகள் எதுவும் போடப்படுவதில்லை, தமிழ் பேப்பர் படித்தால் அவர்களை ஏளனமாக பார்க்கின்றனர் என்று என்ற கருத்துக்களை முன்வைத்தனர் மாணவர்கள்.

அரசியல்வாதிகளைப் பற்றி ஒரு வார்த்தையில் கமெண்ட் செய்த மாணவர்கள், அரசியல் நிலைப் பற்றி குறைவாகவே கூறினார்கள். நிறைய பேருக்கு அரசியல் பற்றி ஆர்வம் இல்லை.

இதற்குக் காரணம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் குறைவாக இருப்பதனால்தான் அவர்களின் கருத்துக்கள் மாணவர்களுக்கு நேரடியாக சென்று சேர்வதில்லை. மாணவர்களை நேரடியாக சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை தொடங்கவேண்டும் என்றார் செந்தமிழன்.

இன்றைய இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறையும், பிரச்சினையின் மீது கோபமும் இருப்பதில்லை. பெற்றோர்களும் இதற்கு ஒரு காரணம். கோபமான இளைஞனை விட மொக்கையான இளைஞர்களைத்தான் கார்ப்பரேட் உலகம் தேடுகிறது. எனவே குழந்தைப் பருவத்தில் இருந்தே எந்த பிரச்சினையிலும் தலையிடாதே என்று சொல்லியே வளர்க்கப்படுகின்றனர்.

இன்றைய கல்வி முறையும் இப்படித்தான் இருக்கிறது. எனவே இளைய தலைமுறையினரையேயான மாற்றம் மெதுவாகத்தான் நிகழும் என்றனர் சமூக ஆர்வலர்கள். பாடப்புத்தகங்கள் தவிர என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் என்பதையும் பரிந்துரைத்தனர்.

இன்றைய தலைமுறையினர் நம் சமூகத்தில் இன்னும் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நியூட்ரினோ தொடர்பான ஆய்வு நடக்கும் தேனி மாவட்டத்தில் சென்று ஆய்வு செய்யவேண்டும். தமிழ்நாட்டில் கழிப்பறை இல்லாமல் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு சென்று வரவேண்டும். தீண்டாமை பற்றி தெரிவதில்லை. அதே போல் குறைந்த பட்சம் அருகில் உள்ள குடிசைகளைப் பற்றி பார்க்கவேண்டும், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பார்க்கவேண்டும் என்றனர்.

எதுபற்றிமே ஒருவித தெளிவற்ற பார்வை இருக்கிறது. இதற்கு காரணம் களப்பணியாளர்களுக்கும், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் உள்ள இடைவெளிதான் காரணம். எனவே இந்த இடைவெளி குறைய வேண்டும் என்றார் கோபிநாத்.

 

Post a Comment