சென்னை: உலகிலேயே மிகவும் இனிமையான ரசிகர்கள் தமிழர்கள்... மிகவும் பாதுகாப்பான ஊர் சென்னைதான், என்றார் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பிலஹிரி.
நமக்ஹலால், ஷராபி, டிஸ்கோ டான்ஸர் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களின் இசையமைப்பாளர் பப்பிலஹிரி. தாய்வீடு, பாடும் வானம்பாடி உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 40 ஆண்டு காலமாக இந்தித் திரையுலகில் முன்னணியில் உள்ள பப்பிலஹிரி, முதல் முறையாக கருப்பம்பட்டி என்ற தமிழ்ப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அஜ்மல் - அபர்ணா பாஜ்பாய் நடிக்க, பிரபுராஜசோழன் இயக்கத்தில் சுந்தர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டுவிழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பப்பிலஹிரி பேசுகையில், "சென்னை எனக்கு எப்போதுமே ரொம்பப் பிடித்த ஊர்... ரொம்ப அதிர்ஷ்டமான ஊர். என்னுடைய சூப்பர் ஹிட் பாடல்களில் பெரும்பாலானவை சென்னையிலோ அல்லது பக்கத்திலிருக்கும் மாமல்லபுரத்திலோதான் மெட்டமைக்கப்பட்டன. ஷராபி, நமக்ஹலால், மிதுன் சக்ரவர்த்தியின் பெரும்பாலான படங்களுக்கு இங்குதான் இசையமைத்திருக்கிறேன்.
சென்னை மாதிரி பாதுகாப்பான ஊரை உலகில் எங்கும் பார்க்க முடியாது. நான் இவ்வளவு தங்கத்தை அணிந்திருக்கிறேன். எங்குபோனாலும் மூன்று பாடிகார்டுகளுடன்தான் போவேன். ஆனால் சென்னையில் எனக்கு எந்த பாடிகார்டும் தேவைப்படவில்லை.
எனது திரையுலக வாழ்க்கையில் இது 40வது ஆண்டு. இந்த சிறப்பான ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் நான் தமிழ்ப் பாடல் பாடியிருக்கிறேன். அதுவே எனக்கு பெருமையாக உள்ளது," என்றார்.
பின்னர் தான் பாடிய தமிழ்ப் பாடலை பாடிக் காட்டினார் பப்பிலஹிரி.
Post a Comment