பிரியாமணி தெலுங்கில் நடிக்கும் "சாண்டி" படம் சோனியாவைப் பற்றியது என்ற தகவல் கசிந்துள்ளதால் உளவுத்துறை விசாரித்து முழு ஸ்கிரிப்டையும் வாங்கிச் சென்றுவிட்டதாக தெரிகிறது.
சாருலதா படமும் கைவிட்டு விட்டதால் தமிழில் சரியான பிரேக் இல்லாத பிரியாமணி தெலுங்கில் கவனம் செலுத்தினார். அவருக்கு கிடைத்த சாண்டி திரைப்படம் பட பூஜையில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று கிசுகிசுக்கப்பட்டது. ஐதராபாத்தில் இதன் துவக்க விழா நடந்தபோது பிரியாமணி படத்தில் நடிக்கும் கெட் அப்பிலேயே வந்து கிசுகிசு செய்தியை உறுதி செய்தார்.
அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. இந்த தகவல் டெல்லிக்கு போகவே விசாரித்து தகவல் அனுப்புமாறு ஆந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும், நடிகை ப்ரியாமணியிடமும் கதை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.
பெண் அரசியல்வாதி
"சாண்டி படத்தில் பெண் அரசியல்வாதி கேரக்டரில் நடிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கதை முழுமையாக தெரியாது" என்று பிரியாமணி கூறியுள்ளார். இயக்குனர் சமுத்திராவோ எதற்கு வம்பு என்று படத்தின் ஸ்கிரிப்டின் பிரதியையே போலீசிடம் கொடுத்துவிட்டதாகவும் அதை போலீசார் உள்துறைக்கு அனுப்பி விட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
"இது அரசியல் கதைதான். ஆனால் தனிப்பட்ட யாரைப் பற்றியதும் அல்ல, சிலருடைய வாழ்க்கையை முன்னுதாரணமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் சமுத்ரா. ஆந்திர அரசியலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் காட்சிகளாக இடம் பெறுகிறது. அரசியலிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்கிற கருத்தைச் சொல்லும் படம்"
"ஆந்திர அரசியலில் புகழ்பெற்ற இளம் தலைவர் ஒருவர் அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்படுகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவரது தங்கையை கட்சிக்கு தலைமை தாங்குமாறு தொண்டர்கள் அழைக்கிறார்கள். கட்சியையும், நாட்டையும் காப்பாற்ற கல்லூரி மாணவியான பிரியாமணி அரசியல் கட்சியின் தலைவியாகிறார். தனது புத்தி கூர்மையாலும், ராஜதந்திரத்தாலும் எதிரிகளிடமிருந்து கட்சியை காப்பாற்றி தேர்தலில் வெற்றி பெற்று எப்படி ஆட்சி அமைக்கிறார் என்பதுதான் கதை என்கிறார் சமுத்ரா.
Post a Comment